உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்தி மட்டுமல்லாது தமிழ், கன்னடம், தெலுங்கு, பெங்காலி போன்ற பிறமொழிகளும் கற்றுத் தருகிறோம், அதனால் என்ன உ.பி.சிறியதாகி விட்டதா? வேலைவாய்ப்புகள் தான் பெருகிவிட்டன என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளதற்கு காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் எதிர்கேள்வி எழுப்பி உள்ளார். உத்தரப்பிரதேசத்தில் எத்தனை பேர் தமிழ் ஆசிரியர்களாக உள்ளனர் என்ற விவரத்தை பகிர முடியுமா என அவர் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

சிலநாட்களுக்க முன்னர் செய்தி முகமை ஒன்றுக்கு உத்தப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதம் மற்றும் மொழி அடிப்படையில் பிரிவினையை வளர்ப்பதாக குற்றஞ்சாட்டி இருந்தார். பிறமொழிகளை ஏன் வெறுக்க வேண்டும்? இந்தி மொழியை கற்றுக் கொண்டால் என்ன? என்று கேள்வி எழுப்பி இருந்தார். உத்தரப்பிரதேசத்தில் மும்மொழிக் கொள்கை திட்டத்தின் கீழ் தமிழ், கன்னடம், பெங்காலி போன்ற மொழிகள் கற்றுத் தரப்படுவதாக கூறியிருந்தார். எங்கள் மாநிலத்தில் தமிழ் மொழியைக் கற்றுத்தரும்போது தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் இந்தி மொழியை ஏன் கற்றுத் தரக்கூடாது என்றும் அந்த பேட்டியில் வினவியிருந்தார்.
இதையும் படிங்க: அரசியலில் நீடிக்க விரும்பவில்லை..! நான் ஒரு யோகி.. ஆதித்யநாத் அதிர்ச்சி பேட்டி..!

இதற்கு பதிலளித்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உத்தர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் நடத்த விரும்புகிறாரா? எவ்வளவு முரண்பாடாக இருக்கிறது. இது ஒரு பொலிட்டிக்கல் பிளாக் காமெடி. நாங்கள் எந்த ஒரு மொழியையும் எதிர்க்கவில்லை; நாங்கள் எதிர்ப்பது எல்லாம் மொழி திணிப்பையும் மேலாதிக்கத்தையும்தான். இது ஒன்றும் வாக்கு வங்கி அரசியலுக்கானதும் அல்ல. இது கண்ணியத்துக்கும் நீதிக்குமான யுத்தம். உ.பி. முதல்வர் பேசுவது அரசியல் பிளாக் காமெடி என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இதே பேட்டி தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார். அதில், உ.பி.யில் தமிழ் மொழியை கற்பிக்கும் ஆசிரியர்கள் எத்தனை பேர்? எத்தனை மாணவர்கள் உ.பி.யில் தமிழ் மொழியை கற்றுக் கொள்வதற்காக பதிவு செய்துள்ளனர்? தமிழ்நாட்டில் இந்தி மொழியை தமிழ் மாணவர்கள் கட்டாயம் படிப்பதற்கு எந்த காரணமும் இல்லை. தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டு எந்த வடஇந்தியரும் இங்கு வேலைக்கு வரவில்லை என்பதோடு இந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்ற ஹேஷ்டேக்கோடு அந்த பதிவினை போட்டிருந்தார். இதனை திமுகவினரும், காங்கிரஸ் கட்சியினரும் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: சுயநலனுக்காக மொழி பிரச்சனைய கிளப்புறாங்க.. ஸ்டாலினை மறைமுகமாக அட்டாக் செய்த யோகி..!