கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை அமெரிக்கா செல்வதற்காக அந்நாடு வழங்கிய ஹெச்1பி விசாவில் 73 சதவீதத்தை இந்தியர்களுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த 105 இந்தியர்களை அமெரிக்க அரசு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பியது. இதில் இந்தியர்களுக்கு கைவிலங்கிட்டு 40 மணிநேரம் விமானத்தில் பயணிக்க வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு மத்திய அரசுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அமெரிக்காவையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை இணைஅமைச்சர் கீர்த்தி வரதன் சிங் எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
அமெரிக்காவுக்கு வேலைக்காகச் செல்வோருக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசா வழங்குவது குறித்து அமெரிக்க அரசுடனும், மற்ற நிறுவனங்களுடனும் மத்திய அரசு நெருங்கிய கண்காணிப்பில்தான் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் திறமைவாய்ந்த மென்பொறியாளர்கள் அமெரிக்காவுக்கு பணிக்குச் செல்வது, அங்கு உழைப்பது இரு தரப்பு நாடுகளின் பரஸ்பரஸ்த்துக்கு உகந்தது.
இதையும் படிங்க: நாடு கடத்தல் புதிதல்ல! 15 ஆண்டுகளாகத் தொடர்கிறது: எண்ணிக்கையை வெளியிட்ட மத்திய அரசு
அமெரிக்க அரசு வழங்கிய தகவலின்படி, கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை அமெரிக்கா செல்வதற்காக அந்நாடு வழங்கிய ஹெச்1பி விசாவில் 73 சதவீதத்தை இந்தியர்களுக்குத்தான் அந்நாடு வழங்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.

உக்ரைன், இஸ்ரேல், பாலஸ்தீன் பிரச்சினையால் எத்தனை இந்திய மாணவர்கள் அங்கு கல்வி, வேலைக்காகச் சென்று பாதிக்கப்பட்டனர் என்ற கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்தார் அவர் பேசுகையில் “ உக்ரைன், ரஷ்யாவுக்கும் இடையே போர் நடப்பதற்கு முன்பாக உக்ரைனில் மட்டும் 21,928 இந்திய மாணவர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்துவந்தனர். ஆனால், உக்ரைன், ரஷ்யா இடையிலான போர், மோதலுக்குப்பின், அங்கு 2024 நவம்பர் 1ம் தேதி நிலவரப்படி 1,802 மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.
அதேபோல இஸ்ரேல் நாட்டில் முனைவர் மற்றும் சிறப்பு மருத்துவம், சிறப்பு அறுவைசிகிச்சை படிப்புகளைப் படிக்க 900 இந்திய மாணவர்கள் சென்றிருந்தனர். ஆனால், இஸ்ரேல்,ஹமாஸ் இடையிலான மோதலுக்குப்பின், 2023, அக்டோபர் 7ம் தேதி ஆப்ரேஷன் அஜெய் நடத்தப்பட்டு 1309 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். இதில் 768 பேர் இந்திய மாணவர்கள். பாலஸ்தீனத்தில் எந்த இந்திய மாணவர்களும் இல்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிறப்புக்குடியுரிமை: அதிபர் ட்ரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை