சமீப காலமாக சீமான் திராவிட எதிர்ப்பு பெயரால் பெரியாரை கடுமையாக எதிர்ப்பது அவருக்கு லாபமாக இருக்குமா பார்ப்போம். சீமானின் சமீப கால அரசியல் அவர் குழப்பத்திலிருப்பதுபோல் தெரிகிறது. அவரது பாதை சரியா? வெற்றி பெறுவாரா? பெரியார் எதிர்ப்பு மூலம் சாதிப்பாரா?
தமிழக அரசியல் களத்தில் 1952 முதல் பொதுத்தேர்தல் சென்னை மாகாணத்துக்கு நடந்தது. அன்று தொடங்கி 1967 ஆட்சி மாற்றம் வரையில் தமிழக அரசியல் களத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுகவினர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பிரதானமாக இருந்தது. அந்த நேரம் திமுக மூன்று வயதான கட்சி என்பதால் போட்டியிடவில்லை.

அதன் பின்னர் 1957-ல் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன். தமிழ்தேசியம் பேசியவர்களும் களத்தில் இருந்தனர். திமுக திராவிட நாடு கோரிக்கையை முன் வைத்து தேர்தலை சந்தித்தது.
இதையும் படிங்க: பெரியாரிஸ்டுகளே உடனே மன்னிப்பு கேளுங்க..! ரிவர்சில் வாங்கி அடிக்கும் சீமான்..
காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்தது. 1962 ஆம் ஆண்டு திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டார். திமுக ஓரளவுக்கு முன்னேறியது. 50 தொகுதிகளை பெற்றது. அதன் பின்னர் அண்ணாவுக்கு போட்டியாக இருந்த சம்பத், கண்ணதாசன் குரூப் வெளியேறியது.

அந்த காலகட்டத்தில் திமுகவினர் பெரியாரை கடுமையாக எதிர்த்து வந்தனர். பெரியாரும் திமுகவை கடுமையாக எதிர்த்தார். சி.பா.ஆதித்தனார் தலைமையில் நாம் தமிழர் கட்சி சிறிய அளவில் இருந்தது.
எம்ஜிஆர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஆதரவு, காமராஜர் இல்லாத காங்கிரஸ் ஆட்சி, தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி, மொழி விவகாரம் போன்ற காரணங்களால் திமுக 1967-ல் ஆட்சியை பிடித்தது. அதன் பின்னர்தான் பெரியார் திமுகவை ஆதரிக்க ஆரம்பித்தார். ஆனால் பெரியார் எனும் பிம்பம் தமிழகத்தின் அடையாளமாக இருந்தது. திமுகவினர் பெரிதும் மதிக்கும் தலைவராக இருந்தார்.
அப்போது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட கட்சிகளை பெரியார் விமர்சித்தாலும் அது அவர் மரியாதையை குறைக்கவில்லை. அதனால் பெரியார் அவரது பிரச்சாரத்தால் மதிக்கப்பட்டார். பெரியார் மறைவுக்கு பிறகு அவர் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார். பெரியார் பிம்பம் அடுத்தடுத்த திராவிட கட்சிகளின் ஆட்சியில் பெரிதாக கட்டமைக்கப்பட்டது.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகளாக இருந்த காங்கிரஸும், இடதுசாரிகளும் திமுக, அதிமுகவினரும் பெரியாரை எப்பொழுதும் அவதூறாக பேசியதில்லை. அவர்கள் பெரியாரை ஒரு தமிழகத்தின் சமூக நீதித் தலைவராக ஏற்றுக் கொண்டனர். மற்றவர்களுக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கப்பட்டதோ, அதே அளவுக்கு பெரியாருக்கும் மரியாதை கொடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய தலைவர்களாக அறியப்பட்ட சி.ப. ஆதித்தனார், மா.பொ.சி உள்ளிட்ட பல தலைவர்களும் பெரியாரை பெரிய அளவில் விமர்சித்தது இல்லை. பெரியார் சமூக சீர்திருத்த தலைவராக மட்டுமே பார்க்கப்பட்டார். திராவிடர் கழகம் அவருடைய கட்சி என்பதால் அடுத்த கட்ட நகர்வாக திராவிடர் கழகம் பெரியாரை தங்களுடைய தலைவராக முன்னிறுத்திய.
இதே காலகட்டத்தில் தான 1982 க்கு பிறகு இலங்கையில் தமிழ் இன மக்கள் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரத்திலும், விடுதலை இயக்கத் தலைவர்கள், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலரும் தமிழகத்தில் தஞ்சம் அடைந்த போது தமிழக அரசியல் கட்சிகள் காங்கிரஸ் உட்பட அவர்களை ஆதரித்தனர்.
பிரபாகரனை பெரிதும் தூக்கி பிடித்து உதவிகள் செய்தது திராவிட கட்சிகளான அதிமுகவும் பின்னர் திமுகவும் அதன் பின்னர் வழிவந்த மதிமுகவும். அதேபோன்று இந்திராகாந்தியும் பெரிய அளவில் பிரபாகரனுக்கு உதவி புரிந்தார்.
அதன்பின்னர் கடந்த பல்வேறு நிகழ்வுகளில் விடுதலைப்புலிகள் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததும், ராஜீவ் காந்தி காலகட்டத்தில் அமைதிப்படை சென்ற விவகாரத்திலும் திமுக பிரபாகரனுக்கு ஆதரவாகவே இருந்தது. முதல்வராக இருந்த கருணாநிதி அமைதிப்படையை வரவேற்க சொல்ல மாட்டேன் என்றெல்லாம் கூட முடிவெடுத்தார்.
அந்த அளவிற்கு பிரபாகரனுக்கு ஆதரவு தமிழகத்தில் இருந்து வந்தது. ஆனால் 2009 -ல் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு இலங்கையில் மிகப்பெரிய அளவில் இன அழிப்பு நடந்த பொழுது திமுக, காங்கிரஸ் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தமிழக கலைத்துறையினர் பாரதிராஜா தலைமையில் ஒன்று கூடி ஒரு அமைப்பை உருவாக்கினர்.
நெடுமாறன் போன்றவர்களும் இந்த அமைப்புடன் இணைந்து பல்வேறு கருத்துகளை விமர்சனங்களை வைத்து வந்தனர். இந்த காலகட்டத்தில் தான் சீமான் நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்தார். அவருடைய பிரதான நோக்கமே விடுதலைப் புலிகள் ஆதரவு, தமிழ் தேசியம் என இருந்து வந்தது.
தமிழ் தேசியம் கொள்கையின் அடிப்படையில் திராவிடத்திற்கு எதிரானது என்பதால் அவர் திராவிடத்தை எதிர்த்து வந்தாலும் பெரியாரை தன்னுடைய வழிகாட்டி, பெரியார் மிகப் பெரிய தலைவர் என்று பலமுறை அவர் பேசி வந்துள்ளார்.
சீமான் பரபரப்புக்காக பேசக்கூடியவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. விமர்சனங்களை கூர்மையாக வைக்க வேண்டும் என்பதற்காக சில நேரம் தன்னுடைய தரத்தை விட்டு இறங்கி அவர் விமர்சித்ததையும் தமிழக பார்த்துள்ளது. இந்த நேரத்தில் தான் சீமான் தன்னுடைய அரசியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் வங்கி வந்தார்.
இந்த காலகட்டத்தில் அண்ணாமலை போன்றோர் பாஜக தலைவர்களாக வந்த நிலையில் திமுக எதிர்ப்பு வாக்குகளை இளையதலைமுறையினர் வாக்குகளை அவரும் ஈர்க்க ஆரம்பித்தார். இது சீமானுக்கு நெருக்கடியை தந்தது. ஆனாலும் அவருக்கு என வாக்குகள் இருந்தது.

இந்த நிலையில் திரைத்துறையிலிருந்து, ரஜினி வருவதாக இருந்து வரவில்லை, கமல் வந்து சோபிக்கவில்லை என்கிற நிலையில் திடீரென விஜய் களத்தில் குதித்ததும், கட்சியை வலுவாக அமைத்ததும் சீமானுக்கு அதிர்ச்சியை தந்தது. விஜய்யுடன் கூட்டணி அமைக்கலாம் என்று சீமான் நினைத்திருந்த நேரத்தில் அதுவும் நடக்கவில்லை.
விஜய் வேகமாக வளர்ந்தால் தனக்கு போட்டியாக திராவிட கட்சிகளின் எதிர்ப்பு வாக்குகளை அள்ளுவார் என சீமான் தரப்பினர் கருதியதால் விஜய்யை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். ஆனால் விஜய் தரப்பு சீமானை கண்டுக்கொள்ள கூடாது என முடிவெடுத்ததால் அதுவும் நடக்கவில்லை. அதன் பின்னர் வேறு யுக்தியை கையில் எடுத்தால் தான் வாக்குகளை தக்க வைக்க முடியும் என சீமான் தரப்பு எண்ணியதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சீமானுக்கு இன்னொரு பிரச்சனை ஆளுங்கட்சி திமுக கொடுத்தது. அது நாதகவை உடைக்கும் முயற்சியில் இறங்கியதும் அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருவதுபோல் உட்கட்சி விவகாரங்களில் சீமான் கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்தியதும் கட்சி நிர்வாகிகள் வெளியில் செல்ல காரணமாக அமைந்தது.
அது தொடர்ந்து நடப்பதும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் வெளியேறும்போது ஒரே காரணத்தை கூறுவதும் பிரச்சனை உண்மைதானோ என எண்ண தோன்றுகிறது. இதன் காரணமாக நாதகவுக்கு சிக்கல் அதிகரித்தது.
இந்நிலையில்தான் ஒரு செய்தியாளர் சந்திப்பில் சீமான் பெரியாரை விமர்சித்தார். அதை திமுக கையில் எடுத்து வைரலாக்கியதும் சீமானை சுற்றி செய்திகள் சுழல ஆரம்பித்தது. இதனால் மேலும் தூண்டப்பட்ட சீமான், பெரியார் குறித்து கூடுதலாக பேச ஆரம்பித்தார். இதற்கு திமுக தரப்பில் பெரிதாக எதிர்ப்பில்லை.
தி.கவும் எதிர்ப்பை காண்பிக்கவில்லை. காரணம் சீமானின் பெரியார் எதிர்ப்பு ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமைந்தது. அதனால் இதைச்சுற்றியே வாதங்கள் சென்றது. சீமான் ஆமைக்கறி சாப்பிட்டாரா போன்ற முக்கியமான(?) வாதங்கள் முக்கிய ஊடகங்கள் மூலம் வைக்கப்பட்டது.
இந்நிலையில் சீமான் பெரியாரை விமர்சிப்பது வலதுசாரி ஆதரவாளர்களால் ஆதரிக்கப்படுவதால் பாஜக வாக்குகளை குறி வைத்து சீமான் இயங்குகிறார் என்ற கருத்து வைக்கப்படுகிறது. மற்றொருபுறம் திமுகவுக்கு ஆதரவாக சீமான் இறங்கிவிட்டார், பிரச்சனைகளை பின்னுக்கு தள்ள பயன்படுகிறார் என்கிற வாதமும் வைக்கப்படுகிறது.
இந்நிலையில் சீமானின் வாதங்கள் யாருக்கு பயனளிக்கிறது, மக்கள் பிரச்சனைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு இதுதான் பிரதான பிரச்சனை போல் ஆக்கப்படுகிறது என்பதால் இதனால் என்ன பயன் என்கிற கேள்வியும் வைக்கப்படுகிறது.
சீமானின் அரசியல், எந்தக்கட்சியுடனும் கூட்டு இல்லை ஆனால் தமிழ்தேச அரசியல் என்பது வளர்ச்சியை நோக்கி செல்வதில் சிக்கல் உள்ள நிலையில், தொண்டர்கள் சோர்வடைவது வெளிப்படுகிறது. அதனால் சீமான் புதிய பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்.
பொதுவாக திராவிட சித்தாந்த எதிர்ப்பும், பெரியார் எதிர்ப்பும் வேறு வேறு, பெரியார் எதிர்ப்பு சீமானுக்கு சிக்கலைத்தான் ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியலாளர்கள். புலி வாலை பிடித்துள்ளாரா சீமான்? அல்லது சரியான பாதையில் தான் பயணிக்கிறாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: பெரியாரிஸ்டுகளே உடனே மன்னிப்பு கேளுங்க..! ரிவர்சில் வாங்கி அடிக்கும் சீமான்..