2024 மக்களவைத் தேர்தலில் பாஜக எனும் ஒற்றை கட்சியையும், நரேந்திர மோடி எனும் ஒற்றை மனிதரை வீழ்த்த எதிர்க்கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணி(INDIA bloc) என்ற பெயரில் கூட்டணி அமைத்தனர்.
அரசியலில் பல வண்ணங்கள், எண்ணங்கள் கொண்ட கட்சிகள் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்ததே அரசியல் அதிசயமாகும்.
தலைமை இல்லாத கூட்டணி.

வானவில்லில் இருக்கும் வண்ணங்களைப் போல் இந்தியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதமான கொள்கைகளை மாநிலத்தில் செயல்படுத்தி ஆட்சியில் இருந்தவை, இருப்பவை. இந்த கட்சிகள் தங்களின் வேறுபாடுகளை, மனக்கசப்புகளை, அரசியல் காழ்ப்புணர்சிகளை, போட்டியை மறந்து பாஜக, மோடி எனும் இரு சக்திகளை எதிர்க்க மட்டுமே ஒன்று சேர்ந்தன.
எதிர்க்கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியில் வியப்புக்குரிய அம்சம் என்னவென்றால், இந்தக் கூட்டணிக்கு தலைவரே கிடையாது. தலைவர் யார் என்பதே அறிவிக்கப்படாமல் தேர்தலுக்கு முன் பலமுறை கூடி இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர், மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு செய்தனர்.
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தலைவரே இல்லாமல் ஒற்றுமையாக செயல்படுவது அரசியலில் வியப்புக்குரியதாக இருந்தாலும், இந்தக் கூட்டணி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் சவால் விடுத்தனர்.
ஏனென்றால் மாநிலத்தில் எதிர் எதிராக அரசியல் செய்யும் கட்சிகள் இந்தியா கூட்டணியில் கை கோர்த்திருந்தன, மக்களவைத் தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியும் அரவணைத்து, விட்டுக் கொடுத்து சென்றது கட்சிகளின் ஒற்றுமையையும் தீர்மானத்தையும் வெளிக்காட்டியது. கூடாரம் காலியானது
ஆனால், மக்களவைத் தேர்தல் முடிந்தபின், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிகளையும், இடங்களையும் பலப்படுத்தியபின் அந்தக் கூட்டணியை திரும்பிக்கூட பார்க்கவில்லை, இதுவரை எந்தக் கூட்டமும் கூட்டப்படவில்லை.
மக்களவைத் தேர்தலுக்குப்பின் நடந்த ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்ததிலும் இந்தியா கூட்டணிக்கட்சிகள் பெயரளவுக்குதான் இருந்தது. ஹரியானா தேர்தலில் இருந்து பிளவு தொடங்கியது.

அழிவுப் பாதை
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தியா கூட்டணிக்குள் மோதல் தீவிரமாகி, தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் வேலையில் இறங்கியுள்ளது.
அதாவது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா உத்தவ், சமாஜ்வாதிக் கட்சிகள் ஆதரிக்கின்றன, ஆம் ஆத்மி கட்சியை எதிர்த்து தீவிரமாக காங்கிரஸ் களத்தில் இருக்கிறது. இந்த கட்சிகள் அனைத்துமே இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தவைதான் ஆனால், இப்போது ஒன்றோடு ஒன்று மோதலில் ஈடுபட்டுள்ளன.
கலைத்துவிடுங்கள்
இந்தியா கூட்டணி அழிவை நோக்கி திரும்பியுள்ளதை அந்தக் கட்சித் தலைவர்களே வெறுப்புடன் கண்டிக்கத் தொடங்கியுள்ளனர். ராஷ்ட்ரியஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் நேற்றுமுன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ இந்தியா கூட்டணி என்பது 2024 மக்களவைத் தேர்தலுக்காக உருவாக்கப்பட்டதுதான். இப்போது நிலைமை மோசமாகிவிட்டது” எனத் தெரிவித்தார்.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லா மனம் வெறுத்து “ இந்தியா கூட்டணியை கலைத்துவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் யார் ஆட்சியைப் பிடிப்பது என்பதில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையிலான “ஈகோ போர்” வலுத்து இந்தியா கூட்டணியில் பிளவு பெரிதாகத் தொடங்கியுள்ளது.

கூட்டணி அழிய 3 காரணங்கள்
இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை நடைமுறை சாத்தியத்தில் அந்தக் கூட்டணி இறந்துவிட்டது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா கூட்டணி அழிவதற்கு 3 முக்கியக் காரணங்களைத் தெரிவித்தனர்.
முதலாவதாக காங்கிரஸ் கட்சி தனது மனநிலையை மாற்றிக்கொள்ளாமல் இன்னும் பெரிய அண்ணன் மனோபாவத்திலேயே செயல்படுவது.
2வதாக மாநிலத்தில் மாநிலக் கட்சிக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும், குறிப்பிட்ட மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக இல்லாத போது கூட்டணி தர்மத்தை மதிக்காமல் செயல்பட்டது. மாநிலக் கட்சிகள் தங்கள் பலமாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சி வளர்வதற்காக சமரசம் செய்யவேண்டும் என்று நினைக்கும் போக்கு.
இந்தியா கூட்டணியை வைத்து காங்கிரஸ் கட்சி தன்னை வளர்த்துக்கொள்ள முயல்வதும், கூட்டணிக்குள் சித்தாந்தரீதியிலான ஒற்றுமை இல்லாததும் அழிவுக்கான காரணங்களாகும்.
வளர்த்துக் கொண்ட காங்கிரஸ்
இந்தியா கூட்டணி தொடங்கப்பட்டபின் காங்கிரஸ் நடவடிக்கையை மட்டும் பார்த்தால், ஜம்மு காஷ்மீர், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், டெல்லி மர்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகளோடு இணக்கமான போக்கை கடைபிடிக்கவில்லை.
பாஜகவை எதிர்க்க தாங்கள்தான் பெரிய கட்சி என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது. ஆனால், மக்களவைத் தேர்தலிலும், பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுடன் நேருக்கு நேர் மோதிய பல தொகுதிகளில் காங்கிரஸ் தோற்றுள்ளது, ஆனால், மாநிலக் கட்சிகள் பாஜகவை வீழ்த்தி, காங்கிரஸை விட வலிமையானவை என நிரூபித்துள்ளன.
இருப்பினும் மக்களவைத் தேர்தல் வாயிலாக காங்கிரஸ் கட்சி தனது எம்.பிக்களின் பலத்தை உயர்த்திக் கொண்டு மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுவிட்டது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில்(54 இடங்கள்) எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கூட கிடைக்காதநிலையில் இந்த முறை அந்தக் தகுதியை வளர்த்து 99 இடங்களை பிடித்தது காங்கிரஸ் கட்சி.
ஆகவே, இந்தியா கூட்டணி கட்சி தொடங்கப்பட்டபின் பிற கட்சிகள் மாநிலங்களில் ஆதாயம் அடைந்ததைவிட, தேசிய அளவில் இழந்த செல்வாக்கை காங்கிரஸ் கட்சி மீ்ட்டுள்ளது.

பீகார், டெல்லி தேர்தல்
2025ம் ஆண்டில் டெல்லி, பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் டெல்லி தேர்தல் அடுத்தமாதம் நடக்கிறது. ஹரியானா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை புறக்கணித்துவிட்டு, காங்கிரஸ் கட்சி தனியாக களம் கண்டனது. அதற்குப் பதிலடியாக டெல்லியில் காங்கிரஸை கழற்றிவிட்டு, ஆம் ஆத்மி தனியாக களம் கண்டாலும் இந்தியா கூட்டணியில் பல கட்சிகள் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இந்த நிலை காங்கிரஸுக்கு ஏற்படுவதற்கு அந்தக் கட்சியின் பிடிவாதப் போக்கு, அணுசரனை இல்லாத போக்கும்தான் காரணமாகும்.
வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதில் மாநிலத்தில் அமைக்கப்பட்ட மகாகட்பந்தன் கூட்டணியில் ஆர்ஜேடி, இடதுசாரிகளுடன் இணைந்து காங்கிரஸ் களம் காண்கிறது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் குறைவுதான், மாநிலக் கட்சியான ஆர்ஜேடிதான் இங்கு சூத்திரதாரியாக நிற்கும்.
2026ல் காங்கிரஸ் நிலை.
2026ம் ஆண்டில் அசாம், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த மாநிலங்களில் கேரளா, அசாம் மாநிலங்களைத் தவிர மற்ற இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பு, முக்கியத்துவம் குறைவுதான்.
குறிப்பாக தமிழகம், மேற்கு வங்கத்தில் தனித்து செயல்பட்டால் காங்கிரஸால் ஒற்றை எண்ணிக்கையில் கூட இடம் கிடைக்காது. மேற்கு வங்கத்தில் பாஜக, திரிணமூல் காங்கிரஸ் இடையேதான் போட்டி இருக்கும்.
ஆனால், காங்கிரஸ் கட்சி, திரிணமூல் காங்கிரஸுடன் கூட்டணி சேருமா, அல்லது இடதுசாரிகளுடன் சேர்வார்களா அல்லது தனித்து களம் காண்பார்களா என்பது குழப்பமானதுதான். ஏனென்றால், திரிணமூல் காங்கிரஸும் இடதுசாரிகளும் மாநிலத்தில் எதிர்துருவங்களாக இருந்தநிலையில் காங்கிரஸ் கட்சி, திரிணமூல் கூட்டணியில் இடம் பெற்றால், இடதுசாரிகள் தனித்து செயல்படலாம்.
இடதுசாரிகளி கழற்றிவிட்டு மம்தாவுடன் காங்கிரஸ் இணையுமா, அல்லது மம்தா ஒதுக்கிவிட்டு இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்குமா அல்லது மூவருமே தனித்து மோதுவார்களா என்பது இந்தியா கூட்டணியின் வெற்றியில் இருக்கிறது.

மாநிலத்தில் அதிகாரப்போட்டி, மத்தியில் கூட்டணி
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் எதிரும் புதிருமாக சட்டப்பேரவைத் தேர்தலில் மோதினாலும், இந்தியா கூட்டணியில் இடம் பெற்று கொள்கைகளை தியாகம் செய்திருந்தனர். கேரளாவில் தொடர்ந்து 2முறை மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியில் இருப்பதால், 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றவிடாமல் காங்கிரஸ் கடுமையாக போட்டியளிக்கும்.
ஆகவே, மத்தியில் இந்தியா கூட்டணியில் இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்து மாநிலத்தில் இரு கட்சிகளும் ஆட்சிக்காக அரசியல் எதிரிகளாக மாறியுள்ளனர்.
ஆகவே 2026ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் பாஜக அல்லது மார்க்சிஸ்ட் கட்சிகளை சுயமாக காங்கிரஸ் கட்சி எதிர்க்க வேண்டும், மற்றவகையில் மாநில கட்சிகளோடுதான் கைகோர்க்க வேண்டும்.
ஆகவே இந்தியா கூட்டணியில் உள்ள மாநிலக் கட்சிகள்தான் வலிமையாக இருக்கிறார்ளேத் தவிர தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சி அந்தக் கட்சிகளை நம்பியே மாநிலத்தில் அரசியல் செய்ய வேண்டும்.
கூட்டணி தர்மம்
2024 மக்களவைத் தேர்தலில்கூட உத்தரப்பிரதேச்தில் சமாஜ்வாதிக் கட்சி காங்கிரஸ் கட்சிக்காக 17 இடங்களை விட்டுக்கொடுத்தது, ஆனால், அதில் 7 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது, 2019ல் தனித்து களம் கண்ட காங்கிரஸ் கட்சி ரேபரேலி தொகுதியில் மட்டும் வென்று அவமானப்பட்டது. அதேசமயம் 2024 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சி 37 இடங்களில் வென்று, மக்களவையில் 3வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது.
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அளித்த 17 இடங்களிலும் ஒருவேளை சமாஜ்வாதிக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால், அதன் எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம். ஆனால் இந்தியா கூட்டமி தர்மத்தை மதித்து சமாஜ்வாதி கட்சி அதைச் செய்யவில்லை.
ஜம்மு காஷ்மீரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களில் போட்டியிட்டு 42 இடங்களில் வென்றது, காங்கிரஸ் கட்சி 32 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் மட்டுமேவென்றது. காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிலை இப்போது இதுதான்.
குற்றச்சாட்டு
ஆனால், இந்தியா கூட்டணியிலும் பெரிய அண்ணன் மனோபாவத்தை வெளிப்படுத்தும் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகளோடு ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
நாடாளுமன்றத்தில் அதானி விவகாரத்தை கிளப்பி காங்கிரஸ் கட்சி முடக்கிவிட்டது என்று திரிணமூல், சமாஜ்வாதி கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதுமட்டுமல்ல, மகாராஷ்டிரா, ஹரியானாவில் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விக்கு மின்னணு வாக்குஎந்திரங்களை காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுவது சரியல்ல என்றும் தேசிய மாநாட்டுக் கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது.

புதிய தலைவரா
இந்தியா கூட்டணி காங்கிரஸால் அழியும் நிலையை நோக்கி செல்லும் நிலையில் அதை வழிநடத்த திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி வர வேண்டும் என்று ஆர்ஜேடி தலைவர் லாலுபிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ள நிலையில், சமாஜ்வாதிக் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் , காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்தியா கூட்டணி தலைவராக சிறந்த தேர்வு என கொளுத்திப்போட்டுள்ளார்.
நடைமுறையில் இந்தியா கூட்டணி இறந்துவிட்டதாக வெளியே தெரிந்தாலும், உண்மையில் கூட்டணியில் உள்ள கட்சிகளே அதைஅழித்துவிடும்.
இதையும் படிங்க: டெல்லி தேர்தலில் தில்லுமுல்லு: அதிகாரிகள், பாஜகவிடம் சரண் அடைந்து விட்டனர்; கெஜ்ரிவால் சரமாரி குற்றச்சாட்டு..
இதையும் படிங்க: காங்கிரஸ்( இந்தியா) கூட்டணிக்கு சாவு மணி..! கலைத்து விடலாம் என உமர் அப்துல்லா அதிர்ச்சி..