நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இதில், மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் கல்வி நிதி மறுக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான், திமுக நேர்மையற்றது. தமிழக மாணவர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை. மாணவர்களின் எதிர்காலத்தை அவர்கள் பாழாக்குகின்றனர். மொழிப் பிரச்னை செய்வது மட்டுமே அவர்களின் வேலை. அதில்தான் அரசியல் செய்கிறார்கள். அவர்கள் (திமுக) ஜனநாயகமற்றவர்கள், நாகரீகமற்றவர்கள் என்று விமர்சித்தார். அவரது இந்த கருத்துக்கு திமுக எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது கண்டனத்தை தெரிவித்தார்.

இதனிடையே தனது கருத்தை வாபஸ் பெறுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்தார். இந்த நிலையில், தர்மேந்திர பிரதான் பேசியதை தமிழர்களை இழிவுபடுத்திவிட்டதாக திமுக திசை திருப்பி நாடகமாடுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் பேசுகையில், திமுகவினர் வழக்கம்போல் நாடாளுமன்றத்தில் இன்று அவதூறுகளை அள்ளி வீசியுள்ளனர். மொழியை வைத்து மீண்டும் ஒருமுறை அரசியல் செய்துள்ளனர். மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடாளுமன்றத்தில் இன்று திமுகவினருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். தமிழக அரசு பள்ளி மாணவர்களை வஞ்சித்து திமுகவினர் செய்யும் கபட அரசியலை அவர் தோலுரித்துக்காட்டியுள்ளார். தமிழகத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் மூன்று மொழியை கற்கும் வசதி உள்ள நிலையில் திமுக அரசு தங்கள் அரசியல் விளையாட்டுக்காக தமிழக பள்ளி மாணவர்கள் வாழ்க்கையுடன் விளையாடுகிறது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் ஒரு கொசு.. கொசுக்களைப் பற்றி பேச வேண்டாம்.. ஜெயக்குமார் தாறுமாறு விமர்சனம்.!
திமுகவினர் நடத்தும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் மூன்றாவது மொழி கற்பிக்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மூன்று மொழியை கற்றுக் கொள்ள திமுகவினர் அனுமதிக்கவில்லை. பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்பதாக ஒப்புதல் தெரிவித்து விட்டு பின்னர் அரசியல் காரணங்களுக்காக யூடர்ன் அடித்ததையும் தர்மேந்திர பிரதான் வெட்டவெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பது போல திமுகவினரின் புளுகு மூட்டைகள் அம்பலபட்டு போனதால் முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது திசைதிருப்பும் அரசியலை கையில் எடுத்துள்ளார். திமுகவினரை பார்த்து கேள்வி எழுப்பினால் தமிழக மக்களை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவமானப்படுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடைமாற்றம் செய்கிறார்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், எழுப்பிய கேள்விகளுக்கு திமுகவினரிடம் பதில் இல்லை. பிஎம் ஸ்ரீ திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை என்றும் அப்படி முன்வராத தன்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது என்றும் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தப்போவதில்லை எனக் கூறி விட்டு செயல்படுத்தாத திட்டத்திற்கு நிதி கோருவது ஏன்? தமிழக மாணவர்களுக்கு நிதி தரவில்லை என பொத்தாம் பொதுவாக கூறுவதால் முதலமைச்சர் கூறுவது உண்மையாகி விடாது. மும்மொழிக்கொள்கையை இந்தி திணிக்கப்படுவதாக கூறி திமுகவினர் செய்யும் வஞ்சக அரசியலை தமிழக மக்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை. தமிழக பாரதிய ஜனதா கட்சி நடத்தி வரும் சமக்கல்வி எங்கள்உரிமை கையெழுத்து இயக்கமே இதற்கு சாட்சி. லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு வருகின்றனர். இந்தி பூச்சாண்டி காட்டி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக மக்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இதுக்கு தான் தடுத்து நிறுத்துனாங்களோ?... திருப்பரங்குன்றம் மலையைப் பார்த்து டென்ஷன் ஆன எல்.முருகன்... இந்து அறநிலையத்துறைக்கு ஆப்பு...!