சுற்றுச்சூழல் துறையில் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ராம்சார் விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெயஸ்ரீ வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி வாழ்த்துக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு....
தமிழ்நாட்டின் நீர் நிலைகள், சதுப்புநிலங்கள் மீட்புக்காக போராடும் கேர் எர்த் அமைப்பின் நிறுவனர் ஜெயஸ்ரீ வெங்கடேசன் ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டுள்ள ராம்சார் அமைப்பின் 'அறிவுபூர்வ சதுப்புநில பயன்பாட்டுக்கான' (Wise use of wetlands) பன்னாட்டு விருது பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உலக அளவில் இந்த விருதினை பெறும் 12 பெண்களில் இவரும் ஒருவர் என்பது தமிழகத்திற்கு பெருமையாகும்.
இதையும் படிங்க: ஒரு கிலோ தக்காளி ரூ.3... சாலையில் கொட்டப்படும் அவலம்...!

சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலம் வெறும் புறம்போக்கு நிலம் என கருதப்பட்டு அழிக்கப்பட்ட காலத்தில் அது ஒரு மிகச்சிறந்த இயற்கை வளம் என நிரூபித்தவர் ஜெயஸ்ரீ வெங்கடேசன். அவருக்கும், மருத்துவர் அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்புக்கும் கால் நூற்றாண்டுக்கும் கூடுதலான உறவு உண்டு.
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாக்கக் கோரி 2003 ஆண்டில் பசுமைத் தாயகம் சார்பில் பள்ளிக்கரணையில் இருந்து சோழிங்கநல்லூர் வரை எனது தலைமையில் நடத்தப்பட்ட மிதிவண்டி பேரணியில் அவர் பங்கேற்றார். கடந்த ஆண்டு அவரது கேர் எர்த் அமைப்பின் 'காலநிலை மாற்றம் மற்றும் நீரிடர் - சென்னைக்கான செயல்திட்டமும் உத்தியும்' ('Climate Change and Water Risk- a Strategy and Action Plan') நூலினை பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி வெளியிட்டார்.
சதுப்பு நிலங்களைக் காக்க தொடர்ந்து பாடுபட்டு வரும் ஜெயஸ்ரீ வெங்கடேசன் ராம்சார் பன்னாட்டு விருதுபெறுவதற்கு முற்றிலும் தகுதியானவர். அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த பதிவில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

ராம்சார் என்பது ஈரான் நாட்டில் உள்ள ஒரு நகரம். அங்கு 1971-ம் ஆண்டு சதுப்புநிலங்களை பாதுகாப்பதற்காக ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்காக ஒரு சாசனம் உருவாக்கப்பட்டது அதற்கு ராம்சார் சாசனம் என்று பெயர். இந்திய அளவில் மொத்தம் 85 இடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 16 ராம்சார் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா, காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம், கரிக்கிலி பறவைகள் சரணாலயம், கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், பள்ளிக்கரணை சதுப்புநிலம், பிச்சாவரம், கோடியக்கரை காட்டுயிர் உய்விடம், சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம், உதயமார்த்தண்டபுரம் பறவைகள் சரணாலயம், வடுவூர் பறவைகள் சரணாலயம், வெள்ளோடு பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், கரைவெட்டி பறவைகள் காப்பகம், லாங்வுட் சோலை காப்புக் காடு ஆகியவை ராம்சார் இடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இளையராஜா இந்தியாவுக்கே பெருமை... புகழாரம் சூட்டும் பாமக தலைவர் அன்புமணி..!