இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன், கடந்த 16ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமால்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் என்பவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த தமிழரசன், கணபதி என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று பைக்கில் சென்ற பிரேமிடம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அது கைகலப்பான நிலையில் தன்வசம் வைத்திருந்த பெட்ரோல் பாக்கெட்களை கணபதி மற்றும் தமிழரசன் மீது வீசி பிரேம் தீவைத்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது பிரேம் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், விவகாரம் பாமக மற்றும் விசிக இடையிலான அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீச்சு! இருவர் உயிருக்கு போராட்டம்! ராணிப்பேட்டையில் பரபரப்பு!

தமிழரசன் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழரசன் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இளம் வயதிலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். பா.ம.க. சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவரான அவர், அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதில் முன்னிலையில் இருந்தார். சமூகவிரோத சக்திகளை கண்டித்தது தான் அவரது உயிருக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. நெல்வாய் பகுதியில் திருமால்பூரைச் சேர்ந்த சட்டவிரோத கும்பல் செய்த அட்டூழியங்களைத் தட்டிக் கேட்டதற்காகத்தான் கஞ்சா வணிகம் செய்வதையும், சட்டவிரோத செயல்களைச் செய்வதையும் பிழைப்பாகக் கொண்ட கும்பல், அவரை கொடூரமான முறையில் பெட்ரோல் குண்டு வீசி, உயிருடன் எரித்து படுகொலை செய்திருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வி.சி.க. தலைவர் திருமாவளவனும் இவரும் மாறுபட்ட கருத்துகளைக் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தரம் உயர்த்தப்பட்டும் "நோ யூஸ்"..அரசு மருத்துவமனையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்