தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தனது முழுமையான கடைசி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் என்பதால் அப்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இயலாது, இடைக்கால பட்ஜெட்டை மட்டும்தான் தாக்கல் செய்ய முடியும் என்பதால் இதுதான் முழு பட்ஜெட்டாக இருக்கும்.

2025-26ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தொடங்கியதும், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதை சுட்டிக்காட்டி திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் பட்ஜெட்டை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிங்க: மாணவர்களுக்காக தான் பட்ஜெட்... கல்விக்காக ரூ.46,767 கோடி ஒதுக்கீடு!!
பட்ஜெட்டை தாக்கல் செய்து தங்கம் தென்னரசு பேசியதாவது:
தமிழகத்தின் அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சியை மனதில் வைத்து இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறோம். பன்முக வளர்ச்சியை நோக்கி தமிழகம் முன்னேறி வருகிறது, மனிதநேயம், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சியை இலக்காக நோக்கி தமிழகம் நடைபோடுகிறது.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வரும் நிதியாண்டில் ஒருலட்சம் புதிய வீடுகள் கட்டப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.3500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அடையாறு ஆற்றை சுத்தம் செய்யும் பணி ரூ.1500 கோடியில் விரைவில் தொடங்கும், இந்த பணி அடுத்த 15 மாதங்களுக்குள் நிறைவடையும். அது மட்டுமல்லாமல் சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கிமீ தொலைவுக்கு புதிய மேம்பாலம் கட்டப்படும். 7 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் ரூ.6668 கோடியில் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, தமிழகத்தில் 29.74 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள்.
இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருக்குறள் முதல் அகழாய்வு வரை.. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த பட்ஜெட்!!