காவல்துறையும், அரசும் முயற்சி எடுத்தாலும் கொண்டாட்ட மன நிலையில், மதுபோதையில், சகிப்புத்தன்மையற்ற மன நிலையில் மூழ்கும் நபர்களால் சில குடும்பங்களுக்கு புத்தாண்டு துன்பமாக விடிந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு முடிந்து 2025 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. வழக்கமாக புத்தாண்டு இரவு என்றால் மறுநாளிலிருந்து உலகமே மாறிபோவது போல் இளம் தலைமுறையினர் பைக் ரேஸ், பார்ட்டி, பார்ட்டி என்றால் மது போதை சமாச்சாரம் என கிளம்பி விடுவார்கள். மிடில் கிளாஸ் ஆட்கள் குடும்பத்துடன் ஹோட்டல் பார்ட்டி என கிளம்புவார்கள், சர்ச், கோயில் என கூட்டம் அலைமோதும். ஸ்விக்கி, சொமாட்டோ, ஆட்டோ, கேப் என உழைக்கும் வர்க்கம் வழக்கம் போல் கூடுதலாக உழைப்பார்கள். நள்ளிரவு 12 மணிக்கு முகம் தெரியாதவர்களுக்கும் கைகொடுத்து ஹாப்பி நியூ ஹியர் சொல்வோம். ஆனால் காலையில் பாதுகாப்பாக வீட்டுக்கு சென்று புத்தாண்டை ஆண்டு முழுவதும் அதே சந்தோஷத்தோடு அனுபவிப்போமா என்றால் அதுதான் இல்லை.
பைக் ரேஸ், உள்ளே போன மதுவால் ஓவர் வேகம், வழியில் தகராறு என சந்தோஷத்தை தொலைத்தவர்கள், வாழ்க்கையை தொலைத்தவர்கள் உண்டு. இப்படி எடுவும் நடந்துவிடக்கூடாது என்று தான் காவல்துறையினர் இரவில் வாகன சோதனை, டிடி கேஸ் பிடிப்பது என இருந்தாலும் அதையும் மீறி அசம்பாவிதங்கள் நடக்கத்தான் செய்கின்றன. விபத்துகளை போலீஸார் கடுமையாக போராடி குறைத்து விட்டனர். ஆனால் அதையும் மீறி நேற்றிரவு சென்னையில் இரண்டு இடங்களில் நடந்த சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். சாலையோரம் நடந்த சிறு தகராறில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டார். இந்த துயர சம்பவங்களைத்தாண்டி சென்னையில் புத்தாண்டு இனிமையாகவே கடந்தது.
சென்னையில் ஆண்டுதோறும் காவல் ஆணையர் மெரினா காந்தி சிலை அருகே கேக் வெட்டுவார். இந்த ஆண்டு காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள அருண் அந்த நிகழ்வை தவிர்த்துவிட்டார். மெரினாவில் பெரிய அளவில் கொண்டாட்டமும் இல்லை. ஆனாலும் பார்கள், பப்கள் நேரத்தை அதிகரித்து இரவு 1 மணி வரை அனுமதித்தனர். பெசண்ட் நகர் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் அலைமோதியது. கடுமையான போலீஸ் சோதனை, ரேஸ் செல்வதை தடுக்கும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருந்ததால் பைக் ரேஸ் நடக்கவில்லை. ஆனாலும் வேகமாக பைக்கை ஓட்டிச் சென்ற இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சென்னையில் இரண்டு இடங்களில் நடந்தது.

சென்னையில் மது போதையில் இருசக்கர வாகனத்தை இயக்கி முன்னால் சென்ற காரை முந்தி சொல்ல முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் வட மாநில தொழிலாளி பலியானார். சென்னை கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள கெங்கு ரெட்டி சுரங்க பாதையில் இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் வடமாநில இளைஞர்கள் தீபக் மற்றும் பாபு ஆகியோர் வாகனத்தை வேகமாக சுரங்கப்பாலத்தில் இயக்கியுள்ளனர். அப்பொழுது முன்னே சென்ற காரை முந்தி சொல்ல முயன்றபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி கீழே விழுந்ததில் இருவரில் ஒருவர் தலையில் பலத்த காயமடைந்தார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயம் அடைந்த தீபக் மற்றும் காயம்டைந்த மற்றொரு நபரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீபக் சிகிச்சை பலனளின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.மற்றொரு இளைஞர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் பைக்கை ஓட்டிய மாணவர் உயிரிழந்தார். உடன் வந்த நண்பர் படுகாயம் அடைந்தார். புத்தாண்டு இரவை கொண்டாடுவதற்காக வடபழனியை சேர்ந்த சாருகேஷ்( வயது 19) என்பவர் தனது நண்பர் சாலிகிராமத்தை சேர்ந்த சஞ்சய்(19) என்பவருடன் சென்றுள்ளார். புத்தாண்டை கொண்டாடிவிட்டு தனது புல்லட் வாகனத்தில் வேகமாக சென்னை திரும்பிக்கொண்டிருந்த இருவரும் சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரியை கவனிக்கவில்லை. வேகமாக வந்த புல்லட் லாரி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட சாருகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சஞ்சய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தவிர கப்பலில் பணியாற்றும் இளைஞர் விடுமுறைக்காக தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில் தெருவில் ஏற்பட்ட சிறு தகராறில் 3 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். காசிமேடு சிங்காரவேலன் நகர் 1வது தெருவை சேர்ந்த விஸ்வநாதன்-தமிழ்ச்செல்வி தம்பதியின் மகன் குமரன் கப்பலில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று நள்ளிரவு குமரன் மற்றும் அவருடைய நண்பர் ராகேஷ் ஆகியோர் உணவு வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளனர். அப்போது அங்கு பெண்கள் கோலம் போட்டுக் கொண்டிருந்தனர், இரு சக்கர வாகனத்தை மெதுவாக ஓட்டிச் செல்லும்படி அங்கு நின்றுக்கொண்டிருந்த மூன்று பேர் எச்சரிக்க அதுவே வாக்குவாதமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: குக்கரில் காத்திருந்த எமன். பெண்ணுக்கு .சமையல் அறையில் நிகழ்ந்த துயரம்
அப்போது அந்த மூன்று பேர் மறைத்து வைத்திருந்த கத்தியால் குமரன் மற்றும் அவருடைய நண்பர்களை வெட்டி உள்ளனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து தடுக்க முயன்ற குமரனின் தந்தை விஸ்வநாதனுக்கும் வெட்டு விழுந்தது. வெட்டியவர்கள் தப்பி ஓடிவிட கத்திக்குத்தால் காயம்பட்ட குமரன் உள்ளிட்ட மூவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்க, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் குமரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து காசிமேடு போலீசார் நடத்திய விசாரணையில் காசிமேட்டை சேர்ந்த பிரபல ரவுடி பட்டு சரவணன், ஆகாஷ், அபினேஷ், ஆகியோர் இந்த கொலையை செய்துவிட்டு தப்பி சென்றதாக தெரியவந்துள்ளது.
மூவர் மீதும் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடிய மூன்று பேரை காசிமேடு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். இச்சம்பவம் காசிமேடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. புத்தாண்டு தொடங்கிய ஒரு சில நொடிகளில் இந்த கொலை நடந்த சம்பவம் அங்குள்ளவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: உயிரிழந்த ஆசை மகன்..கனத்த இதயத்துடன் பெற்றோர் எடுத்த முடிவுக்கு வீரவணக்கம்