துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றதற்காக கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு ரூ.58 கோடி ரொக்கப் பரிசை அறிவித்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). இந்த கோப்பையை வென்ற வீரர்கள், பயிற்சியாளர்கள், அணியின் ஊழியர்கள், தேர்வாளர்களின் முயற்சியைப் பாராட்டி இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்குப் பின் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த பட்டத்தைக் கைப்பற்றியது. லீக் சுற்றிலும் வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்தையும், அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியையும் வென்று இந்த கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. 2002, 2013 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த இந்திய அணி 3வது முறையாக பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்தது.
இதையும் படிங்க: வெளிநாட்டு தொடர்களுக்கு மனைவி இல்லாமல் எப்படி போவது.? பிசிசிஐ மீது கடுப்பு காட்டும் விராட் கோலி.!!

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2023 ஒருநாள் உலகக் கோப்பை பைனலைத் தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி, என தொடர்ந்து போட்டிகளில் தோல்வி அடையாமல் வெற்றி நடை போட்டுவருகிறது. இதுவரை ஐசிசி போட்டித் தொடர்களில் 27 வெற்றிகள், 3 தோல்விகளுடன் இந்திய அணி இருக்கிறது.

இந்திய அணி 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றதற்காக பாராட்டி பிசிசிஐ ரூ.58 கோடி ரொக்கப்பரிசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் “ ஐசிசி தொடர்களில் இரு கோப்பைகளை அடுத்தடுத்து இந்திய அணி வென்றது சிறப்புக்குரியது, இந்த பரிசு இந்திய அணியின் அர்ப்பணிப்பை, உலகளவில் சிறந்து விளங்கியது ஆகியவற்றை அங்கீகரித்து அறிவிக்கப்படுகிறது.

கடின உழைப்பை அங்கீகரித்தும், இந்திய வெற்றிக்காக திரைக்குப்பின் உழைத்த அணியின் ஊழியர்களை பாராட்டியும் இந்தப் பரிசு அறிவிக்கப்படுகிறது. 2025ம் ஆண்டில் இந்திய அணி வென்ற 2வது ஐசிசி கோப்பையாகும், 19வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றிருந்தது. இதன் மூலம் இந்தியாவில் கிரிக்கெட்டுக்கான வலிமையான சூழல் நிலவுவது தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரோஹித் மீதான உருவக்கேலி... பிசிசிஐ என்ன சொல்லுது?