2024ஆம் ஆண்டின் இறுதியில் உள் நாட்டிலும் ஆஸ்திரேலியாவிலும் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இதனால், இந்திய அணியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற முடியாமல் போனது. இந்திய வீரர்கள் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டனர். இதையடுத்து இந்திய வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சில கட்டுப்பாடுகளை விதித்தது.அதில் முக்கியமாக வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது வீரர்களுடன் அவர்களுடைய குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தங்கியிருக்க முடியும் என்கிற கட்டுப்பாடுக் கொண்டு வரப்பட்டது.

அதாவது, வெளிநாட்டில் 45 நாட்களுக்கு மேலாக நடைபெறும் தொடரில் இந்திய அணி விளையாடினால் 14 நாட்கள், அதற்குக் குறைவான நாட்கள் கொண்ட தொடர் என்றால் ஒரு வாரமும் வீரர்களுடன் குடும்ப உறுப்பினர்கள் தங்கியிருக்கலாம் என்கிற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாடுபல முன்னணி வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அண்மையில் துபாயில் இந்தியா விளையாடிய ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் வீரர்களின் குடும்பத்தினர் அனுமதிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: ரோஹித் மீதான உருவக்கேலி... பிசிசிஐ என்ன சொல்லுது?

இந்நிலையில் இந்த விதிமுறை இந்திய அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். "வெளிநாட்டு பயணங்களின்போது ஏற்படும் மன அழுத்தம் போன்ற சூழ்நிலைகளிலிருந்து மீள குடும்பத்தினரின் ஆதரவு மிகவும் அவசியம். இதை பலரும் உணரவில்லை. இதுபோன்ற விதிமுறைகள் உருவாக்கப்படுவது உண்மையிலேயே மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. களத்தில் சிறப்பாக விளையாடாத நேரத்தில் போட்டி முடிந்த பிறகு என்னுடைய அறையில் சோகத்தோடு உட்கார்ந்திருக்க நான் விரும்பவில்லை. இயல்பாக இருக்க வேண்டியே உள்ளது.

விளையாட்டில் வீரர்களின் மனநிலை நல்ல முறையில் இருப்பது அவசியம். அப்படி இருந்தால்தான் சிறப்பாக செயல்பட முடியும். நான் நன்றாக இருந்தால்தான் என்னுடைய கடமையை முடித்துவிட்டு மீண்டும் வாழ்க்கையைப் பார்க்க முடியும். எப்போதுமே குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அதனால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை நான் தவற விடுவதில்லை" என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கிரிக்கெட் ரசிகர்களுக்கு குஷி செய்தி.. ஐபிஎல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியீடு.!