கராச்சியில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூசிலாந்து அணி.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் குவித்தது. 321ரன்கள் எனும் கடின இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆட்டமிழந்து 60 ரன்களில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து அணி 2 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு நகர்ந்தது. இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் பாகிஸ்தானுடன் ஆடிய 4 ஆட்டங்களிலும் ஒன்றில்கூட தோல்வி அடையாத அணி என்று தக்கவைத்துள்ளது.
இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி...முதல் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை காலி செய்தது நியூசிலாந்து..!

அதேபோல பாகிஸ்தான் அணிக்கு அடுத்துவரும் இரு ஆட்டங்களுமே சவாலாக மாறும். இந்திய அணியுடனான ஆட்டம் எப்போதுமே பாகிஸ்தான் வீரர்களுக்கு சவாலாக இருக்கும், அடுத்ததாக வங்கதேசமும் வெற்றியை பாகிஸ்தானுக்கு எளிதாக விட்டுக்கொடுக்காது போராடித்தான் பாகி்ஸ்தான் வெல்லவேண்டியதிருக்கும். ஆதலால், பாகிஸ்தான் அணி தனது அடுத்த 2 ஆட்டங்களிலும் வெற்றி என்பது எளிதாகக் கிடைக்கும் அம்சமாக இருக்காது,
நியூசிலாந்துக்கு வெற்றியின் ரகசியம்
நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் வில் யங்(107), டாம் லேதம்(118) அடித்த சதம், கிளென் பிலிப்ஸ்(61) கேமியோ ஆடி அரைசதம் அடித்தது மிகப்பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. சாம்பியன்ஸ் டிராபி அறிமுகப் போட்டியிலேயே வில் யங் சதம் அடித்து 8-வது வீரர் என்ற சாதனையை பதிவு செய்தார். இதற்கு முன் சாம்பியன்ஸ் டிராபியின் அறிமுகப் போட்டியில் நியூசிலாந்து தரப்பில் எந்த வீரரும் சதம் அடித்ததில்லை அதை வில் யங், டாம் லேதம் செய்துள்ளார்.

அதேசமயம் பந்துவீச்சில் ரூர்க், கேப்டன் சான்ட்னர் எடுத்த தலா 3 விக்கெட்டுகள், ஹென்றி வீழ்த்திய 2 விக்கெட்டுகள் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. அது மட்டுமல்லாமல் ரூர்க், ஹென்றி இருவரும் பவர்ப்ளேயில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் பேட்டர்களை நிலைகுலையச் செய்தனர், ரன்களைச் சேர்க்கவே கடினமாக இருந்தது.
நடுப்பகுதி ஓவர்களில் பிரேஸ்வெல், சான்ட்னர், கிளென் பிலிப்ஸ் ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து பாகிஸ்தான் பேட்டர்களின் கரங்களுக்கு விலங்கிட்டதுபோல் பந்துவீசினர். பாகிஸ்தான் அணி 28-வது ஓவரில்தாந் 100 ரன்களையே எட்டியது. அந்த அளவு பாகிஸ்தான் ரன்ரேட்டை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் இழுத்துப் பிடித்தனர்.
இந்த ஆட்டத்தில் பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் ஆகிய 3 பிரிவுகளிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் கிளென் பிலிப்ஸ்தான். இந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 34 பந்துகளில் அரைசதம் அடித்து நியூசிலாந்து ஸ்கோர் உயர்வுக்கும் பிலிப்ஸ் முக்கியக் காரணமாகினார். பீல்டிங்கில் ரிஸ்வான் ஆப்தசையில் விலக்கி அடித்த ஷாட்டில் தாவிச்சென்று பிலிப்ஸ் பிடித்த கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றி, நியூசிலாந்து கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

பிலிப்ஸ் பிடித்த கேட்சால் கேப்டன் ரிஸ்வான் எனும் மிகப்பெரிய விக்கெட் இழப்பிலிருந்து பாகிஸ்தான் மீளமுடியவில்லை. இந்த கேட்சை பிலிப்ஸ் பிடிப்பார் என ரிஸ்வானும் நினைக்கவில்லை, களத்திலிருந்து ஏமாற்றத்துடன் சென்றார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
நியூசிலாந்து 8-வது வீரர் வரை வகைவகையான பேட்டர்களை வைத்திருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். இந்த ஆட்டத்தில் கேன் வில்லியம்ஸ்(1) ரன்னில் ஆட்டமிழந்தார். ஒற்றை இலக்க ரன்னில் கேன் வில்லியம்ஸன் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப்பின் நேற்றுதான் ஆட்டமிழந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் 35 இன்னிங்ஸ்களில் ஆடிய வில்லியம்ஸன் 34 இன்னிங்ஸ்களிலும் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்துதான் ஆட்டமிழந்துள்ளார்.
பாகிஸ்தான் ஏன் தோற்றது
பாகிஸ்தான் தோல்விக்கு பல காரணங்களைக் கூறலாம்.பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும், பீல்டிங்கிலும் பல தவறுகளைச் செய்தது. குறிப்பாக பந்துவீச்சில் பாகிஸ்தான் வீரர்களிடம் கட்டுக்கோப்பு, துல்லியம் என எதுவுமே இல்லை.
உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களான ஹாரிஸ் ராப், ஷாகித் அப்ரிடி இருந்தும், பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. ஹாரிஸ் 83 ரன்களையும், அப்ரிடி 68 ரன்களையும் வாரி வழங்கினர். பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது மட்டுமே 4 ரன்ரேட்டில் நேற்று பந்துவீசி விக்கெட் வீழ்த்தினார்.
மற்ற அனைத்துப் பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 6 ரன்கள்வீதம் வாரிய வழங்கியதுதான் தோல்விக்கு முதல் காரணம்.

2வதாக பாகிஸ்தான் சந்தித்த டாட் பந்துகள். இந்த ஆட்டத்தில் மட்டும் பாகிஸ்தான் அணி, 162 டாட் பந்துகளை சந்தித்தது, அதாவது ஏறக்குறைய 27ஓவர்களில் ரன்கள் ஏதும் அடிக்கவில்லை என்பது இதன் அர்த்தம். இலக்கு பெரிதாக இருக்கிறது, ஓவருக்கு 6ரன்களுக்குமேல் வெற்றிக்கு தேவைப்பட்டபோது, 27 ஓவர்களை டாட் பந்துகளாக விட்டது பாகிஸ்தான் தோல்விக்கு 2வது காரணம்.
3வது காரணம் பாபர் ஆஸம். பாகிஸ்தான் வெற்றிக்கு பலபோட்டிகளில் காரணமாக இருந்தவர், பல போட்டிகளில் ஒற்றை மனிதராக இருந்த வெற்றிக்கு அழைத்துச் சென்ற பாபர் ஆஸம் ஏன் இப்படி பேட் செய்தார் என்று கேட்கும் அளவு மோசமாக இருந்தது. 90 பந்துகளில் 64ரன்கள் சேர்த்து பாபர் ஆஸம் ஆட்டமிழந்தார். 81 பந்துகளில்தான் பாபர் ஆஸம் அரைசதத்தையே நிறைவு செய்தார். பாபர் ஆஸம் ஆமை வேகத்தில் ஆடியது, ரன் சேர்க்க வேகம் காட்டாதது தோல்விக்கு இட்டுச் சென்றது.

நியூசிலாந்து அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு பாகிஸ்தான் பேட்டர்களை நிலைகுலைய வைத்து. 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப்பின் நடந்த ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி முதல் 10 ஓவர்களில் சேர்த்த குறைந்த பட்ச ஸ்கோர் நேற்று சேர்த்ததாகும், சாம்பியன்ஸ் டிராபில் 3வது குறைந்தபட்ச ஸ்கோராக அமைந்தது. அணியின் மெதுவான ரன் சேர்ப்பு தோல்வியை உறுதி செய்தது.
நியூசிலாந்து அணியின் நேற்றைய உலகத்தரமான பீல்டிங்கோடு ஒப்பிடுகையில் பாகிஸ்தான் தரம்தாழ்ந்துதான் இருந்தது. நியூசிலாந்து அணி பீல்டர்கள் மட்டும் நேற்று 20 ரன்களையாவது சேமித்திருப்பார்கள்.
பாகிஸ்தான் அணியில் பக்கர் ஜமான்(24), சல்மான்(42),குஷ்தில் ஷா(69) ஆகியோரைத் தவிர மற்ற பேட்டர்கள் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. அதிலும் குஷ்தில் ஷா கடைசி நேரத்தில் அதிரடியாக பேட் செய்து ரன் சேர்க்காமல் இருந்தால், பாகிஸ்தான் அணி 200 ரன்களில் சுருண்டிருக்கும்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி.. பும்ரா, ஜெய்ஸ்வால் அவுட்.. துபாய் செல்லும் இந்திய அணி அறிவிப்பு..!