இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும் பாஜக முன்னாள் எம்.பியுமான கெளதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். “ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்” (ISIS Kashmir) எனும் அமைப்பிடம் இருந்து கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்அஞ்சல்கள் வந்துள்ளதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள ராஜேந்தர் நகர் காவல் நிலையத்தில் கம்பீர் சார்பில் புகார் அளிக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில் “இந்திய அணியின் பயிற்சியாளரும், பாஜக முன்னாள் எம்.பி. கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்து 2 மினஅஞ்சல்கள் வந்துள்ளன. ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் என்ற அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளோம். இந்த மின்அஞ்சல், காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய அன்றுதான் மிரட்டல் மின்அஞ்சல்கள் சந்தேகத்துக்குரிய மின்முகவரியில் இருந்து வந்துள்ளன.
இதையும் படிங்க: சொந்த மண்ணில் படுமோசமாக விளையாடிய SRH... அதிரடி பேட்டிங்கால் MI அபார வெற்றி!!

அந்த மின்அஞ்சலில் “ஐ கில் யூ” (IKillU) என்று ஆங்கிலத்தில் 3 வார்த்தைகள் மட்டும் உள்ளன. இது தொடர்பாக முறைப்படி கம்பீர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது” எனத் தெரிவித்தனர்.

கம்பீருக்கு மிரட்டல் விடுத்து மின்அஞ்சல்கள் வந்தது முதல்முறையல்ல. 2021ம் ஆண்டில் இதேபோன்று கொலை மிரட்டல் விடுக்கப்பட் நிலையில், அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சமீபத்தில் கம்பீர் தனது குடும்பத்தாருடன் பிரான்ஸுக்கு சுற்றுலா சென்றிருந்தார். ஐபிஎல் தொடர் நடந்து வருவதால் இந்திய அணிக்கு எந்தவிதமான போட்டிகளும் இல்லாததால், குடும்பத்துடன் விடுமுறையை கழித்துவிட்டு வந்துள்ளார்.

காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்ட நிலையில் அதற்கு கம்பீர் எக்ஸ் தளத்தில் பகடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் பதிவிட்ட கருத்தில் “உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் குடும்பத்தினர் மீண்டு வரவும் பிரார்த்திக்கிறேன், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் நிச்சயம் விலைகொடுப்பார்கள், இந்தியா பதிலடி கொடுக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்.. பிசிசிஐ அஞ்சலி..! MI vs SRH ஆட்டத்தில் பட்டாசு இல்லை, ஒரு நிமிடம் மெளனம்..!