தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக கல்வித் துறைக்கு நிதி தர முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. தமிழகத்தில் இரு மொழி கொள்கையை விட்டுத் தரமாட்டோம் என திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் விடாப்பிடியாக தெரிவித்துள்ள நிலையில், மும்மொழிக் கொள்கையின் நன்மைகள் குறித்து பாஜகவினர் எடுத்துரைத்து வருகின்றனர்.

இதனிடையே திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அறநிலையத்துறை அமைச்சரான சேகர்பாபுவை சரமாரியாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலுமே இரு மொழிக் கொள்கை மட்டுமே உள்ளது என கூற முடியுமா, பணம் படைத்தவர்களின் குழந்தைகள் மட்டும் தனியார் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளில் மூன்று மொழியில் கற்க வேண்டுமா என வானதி காட்டமாக கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் கடந்த கால வரலாறுகளை எடுத்துப் பாருங்கள் திமுக பிரிவினைவாத கட்சி அல்லாமல் வேறென்ன. இந்தி மொழியை திணிப்பதாக திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. திருப்பரங்குன்றம் மலையை, சிக்கந்தர் மலை என்று சொல்வதை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒப்புக்கொள்கிறாரா என கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசன், அதற்கு பிறகு சங்கி வருகிறார்களா, மங்கி வருகிறார்களா என பார்க்கலாம் எனக்கூறினார்.
இதையும் படிங்க: இந்தியாவிலேயே.. ஏன் உலகிலேயே.. விளம்பர மோக அரசு திமுக அரசுதான்.. வானதி சீனிவாசனுக்கு வந்த கோபம்.!
இதையும் படிங்க: திமுககாரன் என்றால் குற்றம் செய்வதற்கு அதிகாரபூர்வ அடையாளமா.? திமுக அரசை வெளுத்து வாங்கும் வானதி சீனிவாசன்!