''விஜய் எப்போதும் எங்கள் வீட்டு பையன்தான். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், சினிமா வேறு, அரசியல் வேறு'' என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ''விஜயை பட்டி தொட்டி எங்கும் செந்தூரப் பாண்டி படத்தின் மூலம் கொண்டுபோய் சேர்த்தவர் கேப்டன் விஜயகாந்த். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில்தான் சின்ன வயதில் இருந்து இருந்தவர். ஆகையால் விஜய் எப்போதும் எங்கள் வீட்டு பையன்தான். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், சினிமா வேறு, அரசியல் வேறு. இதை நான் விஜய் இடமே நேரடியாக பலமுறை சொல்லி இருக்கிறேன்.

அவர் அவ்வளவு பெரிய பிசினஸை விட்டுவிட்டு, சினிமா துறையில் அவ்வளவு பெரிய ஆளாக இருந்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு இன்றைக்கு அரசியலுக்கு வந்திருக்கிறார். அதை நாம் முதலில் பாராட்ட வேண்டும். என்ன சாதிக்கப் போகிறார்? என்ன சரித்திரம் படைக்கப் போகிறார்? என்பதை உங்களைப் போல நாங்களும் காத்திருக்கிறோம். முதலில் அவர் நாளுக்கு நாள் ரூமில் உட்கார்ந்து பேசுவதை விட்டுவிட்டு பொதுவெளியில் வந்து மக்களை சந்திக்க வேண்டும். பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டும். மக்கள் பிரச்சினையை கையில் எடுக்க வேண்டும். அப்போதுதான் அரசியலில் நம்மால் நிலைத்து நிற்க முடியும். இதை நான் விஜய் இடமே சொல்லி இருக்கிறேன்.
இதையும் படிங்க: மார்ச் மாதத்தில் சுற்றுப்பயணம் கிளம்பும் விஜய்... இனி அதிரடிதான்...
எனவே பொறுத்திருந்து பார்ப்போம். அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது வருபவர்கள் உடனே முதல்வராக வேண்டும் என நினைக்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். உதயநிதி மட்டும் உடனே வந்தவுடன் துணை முதல்வர் ஆகலாமா? இது மக்கள் கேட்கும் கேள்வி. அதை நானும் கேட்கிறேன். உதயநிதி ஒரு மூன்று நான்கு வருடத்திலேயே சாதாரண உறுப்பினராக உள்ளே வந்தார். எம்எல்ஏ ஆனார். உடனே அமைச்சரானார்.

அடுத்து துணை முதல்வர் ஆகிவிட்டார். இதெல்லாம் நடந்தது மூன்று நான்கு வருடத்திற்குள்தான். அதை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? நான் இதை மக்கள் கேள்வியாக முதல்வரிடம் கேட்கிறேன். எங்களை பொறுத்த வரை விஜய் யாருடன் கூட்டணி? யாருடன் வரப் போகிறார் என்பதை விஜய் தான் தெளிவுபடுத்த வேண்டும். அதைப்பற்றி என்னோட கருத்தாக நான் எதையும் சொல்ல முடியாது'' என்றார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி பேசிய அவர், ''இன்று நேற்று அல்ல. இந்துக்களும், முஸ்லிம்களும் அண்ணன்- தம்பிகளாக எத்தனையோ வருடங்களாக இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வளவு வருடம் வராத புது பிரச்சினை இப்போது ஏன் வருகிறது? இதற்கு பின்னணியில் முற்றிலும் அரசியல் தான் இருக்கிறது. மதத்தை பிரித்து, ஜாதியை பிரித்து அரசியல் செய்யத்தான் பார்க்கிறார்கள்.

உண்மையில் சகோதர- சகோதரிகளாக வாழ்கின்ற இந்துக்கள் மத்தியிலோ, இஸ்லாமியர்கள் மத்தியிலயோ எந்த பிரிவினையும் இல்லை. எனவே மதத்தை தூண்டி அரசியல் செய்வது மிக மிக ஆபத்தான ஒரு விஷயம். திமுக இது போன்ற விஷயங்களை செய்வது அவர்களது வழக்கம். ஆகையால் இந்த பிரச்சினை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதற்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தொடர்ந்தால் மிகப்பெரிய அபாயத்தை உண்டாக்கும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கட்சி தொடங்கியதுமே ஆட்சியைப் பிடிப்போம்... முதல்வராவோம் என்பதா..? விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்த முதல்வர்.!