ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 27 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 12 சுற்றுலா பயணிகளும் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது. இந்தியாவில் அமெரிக்காவின் துணை அதிபர் ஜேடி வான்ஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பயங்கரவாத தாக்குதல்...ஐஎஸ்ஐ-யை தூண்டிவிட்ட பாகிஸ்தான் ராணுவத் தளபதி..? உடைக்கப்படும் கழுத்து நரம்புகள்..!

இதுகுறித்து அறிந்த பிரதமர் மோடி, தற்போது சவுதி அரேபியா சென்றுள்ளதால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு நிலவரத்தை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் விரைந்துள்ளார். ஶ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு மற்றும் பாதுகாப்பு படையினருடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார். இந்த பயங்கரவாத தாக்குதலால் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக்க் மாவட்ட நிர்வாகம் 9596777669, 01932225870, 9419051940 (வாட்ஸ்அப் எண்) ஆகிய அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. 24 மணிநேரமும் செயல்படக் கூடிய அவசர கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, பஹல்காம் பள்ளத்தாக்கு பகுதிக்கு விரைந்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, ஜம்முகாஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தீவிரவாதிகள் தாக்குதல்.. ஆங்காங்கே கிடக்கும் சடலங்கள்.. நிலைகுலைந்த மக்கள்..!