நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டெழும் என அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. மிகுந்த எதிர்பார்ப்புடன் இத்தொடருக்கு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர் தோல்விகளால் அணியும் ரசிகர்களும் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் சிக்கி தவித்து வருகிறது.

சிஎஸ்கே அணியின் படுமோசமான ஆட்டத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முன்னாள் சிஎஸ்கே வீரர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரும் அணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் விமர்சித்து வருகின்றனர். டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் என அணியில் எல்லா வீரர்களும் ரன் குவிக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.
இந்நிலையில் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரி வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அந்த அணியின் செயல்பாடு பற்றி பேசியுள்ளார்.
“இந்த சீசனில் சிஎஸ்கே ஆட்டத்தை பார்த்து ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள் எனத் தெரியும். அதிருப்தியும் இருக்கும். இதற்கு முன்பும் இது போல நடந்துள்ளது. இந்த சீசனில் இதுவரை நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. ஆனால், எதிர்வரும் போட்டிகளில் நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்கிற நம்பிக்கை உள்ளது. அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியாக இருப்பதால் அது நடக்கும் என்று நம்புகிறோம்.

தோனி தலைமையிலான அணியை ஒருபோதும் நிராகரித்து விட முடியாது. 2010ஆம் ஆண்டு சீசனும் இது போலதான் இருந்தது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவினோம். பின்னர் கம்பேக் கொடுத்து, அந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றோம். அதுதான் ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே வென்ற முதல் பட்டம். வீரர்கள் அர்ப்பணிப்புடன் கடும் பயிற்சி மேற்கொன்டு வருகிறார்கள். அது எதிர்வரும் ஆட்டங்களில் வெளிப்படும். நாங்கள் மீண்டெழுவோம்” என காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: டாஸ் வென்ற DC அணி பவுலிங்... பதிலடி கொடுக்குமா LSG அணி!!
இதையும் படிங்க: ஐபிஎல் 2025: எல்எஸ்ஜி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 'மேட்ச் பிக்சிங்'... பரபர குற்றச்சாட்டு..!