பிரதமர் மோடி பிரான்ஸ், அமெரிக்கா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ளார். பிரான்ஸ் பயணத்தை முடித்துவிட்டு நேற்று அமெரிக்காவுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவின் புதிய உளவுத்துறை தலைவர் துள்சி கப்பார்டை சந்தித்து நேற்று பிரதமர் மோடி பேசினார். புதிதாக பதவியேற்றுள்ள துள்சி கப்பார்டுக்கு வாழ்த்துக்களையும் பிரதமர் மோடி தெரிவித்தார். அதன்பின், வெள்ளை மாளிகையில் அமெரி்க்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்துப் பிரதமர் மோடி பேசினார்.

இரு தலைவர்களும் கூட்டாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது,
எந்த நாட்டிலும் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்களுக்கு அங்கு வசிக்க சட்டரீதியான உரிமை இல்லை. இந்தியா, அமெரிக்காவைப் பொருத்தவரை, நாங்கள் எப்போதும் சொல்வது என்னவென்றால், இந்தியர்கள் என்று உறுதி செய்யப்பட்டவர்கள், ஆவணங்கள்படி உறுதி செய்யப்பட்டவர்கள், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்தால், அவர்களை உடனடியாக தாயகம் அழைத்துக் கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது.

பெரும்பாலான நடுத்தரக் குடும்பத்தினர் பெரிய கனவுகளுடன் தவறான வழிகாட்டலால் ஆட்கடத்தல் மூலம் அமெரிக்கா வந்து சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். ஆட்கடத்தல் எப்படி நடக்கிறது என்பதை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்பட்டு இந்த ஆட்கடத்தல் எங்கு நடக்கிறது, எப்படி நடக்கிறது என்பதைக் கண்டறிந்து அதன் ஆனிவேரை அழிக்க வேண்டும்.இந்த ஆட்கடத்தல் முறையை ஒழிப்பதற்கு அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு ஒத்துழைத்து செயல்படுவார் என நம்புகிறேன்.

இதையும் படிங்க: MAGA+MIGA=MEGA என்றால் என்ன? பிரதமர் மோடியின் புதிய கோட்பாடு என்ன?
இந்தியா இரு துணைத் தூதரகங்களை லாஸ் ஏஞ்செல்ஸ் நகரிலும், பாஸ்டன் நகரிலும் திறக்க இருக்கிறது. இந்தியர்கள் இங்கு வாழ்வதால், இருதரப்பு நாடுகளின் நட்புறவை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும். அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களையும் இந்தியாவில் கிளை உருவாக்க கோரியுள்ளோம்”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். அதிபர் ட்ரம்ப் பதவி ஏற்ற சில வாரங்களில் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 100க்கும் மேற்பட்ட இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பிவைத்தார்.

இந்தியர்களை விமானத்தில் கை,கால்களில் விலங்கிட்டு அமெரிக்க ராணுவம் அழைத்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பி, இந்தியர்களை மதிப்புக் குறைவாக, மனிதநேயமற்று நடத்தியவிதம் குறித்து அதிருப்தி தெரிவித்தனர். இது தொடர்பாக பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் பேசி, இந்தியாவின் கவலைகள் தெரிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உளவுத்துறையில் கூட்டுறவு: அமெரிக்க உளவுத்துறை தலைவர் துள்சி கப்பார்டுடன் பிரதமர் மோடி சந்திப்பு