சீமான் அப்படி என்ன கூறிவிட்டார் என்று பின்னோக்கிச் சென்று பார்த்தால் கடலூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது பெரியார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தமிழை காட்டுமிராண்டிகளின் பாஷை என்று பெரியார் கூறியுள்ளதாக சீமான் தெரிவித்தார். தமிழை இழிவுபடுத்திய பேசிவிட்டு அவர் மொழிச்சீர்திருத்தம் செய்தார் என்று பேசியதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தாய், மகள், அக்கா, தங்கை என்ற பேதம் பாராமல் யாரோடு வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்றும் பெரியார் பேசியதாக சீமான் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.

சீமானின் இந்த கருத்து பெரியார் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சீமானின் வீட்டை முற்றுகையிடப் போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் அறிவித்தார். தந்தை பெரியார் அவ்வாறு பேசியதாக ஆதாரம் இருந்தால் அதனை சீமான் வெளியிட வேண்டும் என்றும் இல்லையென்றால் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அறிவித்தபடி சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டை தபெதிகவினர் இன்றுகாலை முற்றுகையிடச் சென்றனர்.
இதையும் படிங்க: சீமான் வீட்டை முற்றுகையிட முயற்சி; தபெகவினரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்!
முன்னதாக இரும்பு தடுப்புகளை போட்டு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதனை மீறி உள்ளே செல்ல தபெதிகவினர் முயன்றதால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற தபெதிகவினர் கைது செய்யப்பட்டனர். அப்போது பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
அப்போது கு.ராமகிருஷ்ணன் பேசியதாவது, "" தந்தை பெரியாருக்கு பெரியார் என்ற பட்டத்தைக் கொடுத்ததே பெண்கள் தான் என்றும் 1938-ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் இந்த பட்டத்தை பெண்கள் வழங்கினார்கள். அப்படிப்பட்ட பெரியாரையும், பெண்களையும் ஒருசேர கொச்சைப்படுத்தும் விதமாக சீமான் பேசுகிறார். பெண்ணிய உணர்வாளர்கள், போராளிகள் என யாரும் சொல்லாத வகையில் பெண் உரிமைக்காக - விடுதலைக்காக போராடியதால் தான் பெண்களே இந்த பட்டத்தை அவருக்கு வழங்கினார்கள். சங்கிகள் முந்தைய காலங்களில் பேசியதை இப்போது சீமான் பேசுகிறார்.

1953-ம் ஆண்டு பெரியார் இவ்வாறாக பேசியதாக சங்கிகள் முன்பு குற்றஞ்சாட்டினர். இதோ என் கையில் 11.05.1953-ம் வருடத்திய விடுதலை நாளிதழ் உள்ளது. இதில் 4 பக்கங்கள் உள்ளன. இதில் எந்த இடத்திலும் பெரியார் அவ்வாறு பேசியதாக ஒருவரி கூட இல்லை. அபாண்டமான பொய்யை சீமான் பரப்பி வருகிறார். அடுத்தவன் மனைவியை பெண்டாளலாம் என்று பெரியார் கூறியதாக 1973-ம் ஆண்டு துக்ளக் செய்தி வெளியிட்டது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் துக்ளக் ஆசிரியர் சோ மன்னிப்புக் கோரினார். சீமானும் தொடர்ந்து பொய்யாகவே பேசி வருகிறார். சீமான் தற்போது புதுச்சேரியில் தங்கியிருப்பதாக அறிகிறோம். அங்கும் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம்."" என்றார்.

ஒருகாலத்தில் தந்தை பெரியாரை வெகுவாக புகழ்ந்து வந்த சீமான், சமீபமாக அவர் குறித்து அவதூறான கருத்துக்களை பொதுவெளியில் பேசி வருகிறார். பாஜகவின் B டீம் தான் நாதக என்று ஒருசில அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவது வழக்கம். சீமானின் இத்தகைய பேச்சுக்கள் அதனை உறுதிபடுத்துகிறதோ எனவும் அரசியல் விமர்சகர்கள் இப்போது கூறுகின்றனர்.
இதையும் படிங்க: திராவிட மாடல் ஆட்சி ..வார்த்தைக்கு பின்னால் இருக்கும் சரித்திரம் ..மேடையில் புட்டுப்புட்டு வைத்த திமுக எம்.பி கனிமொழி