விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கு முன்பாக, கடந்த 2024 ஜூன் 11 ஆம் தேதி விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான். 7 மாதங்கள் கழித்து மீண்டும் அதே விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏழு மாதங்களாக பதவி பறிக்கப்பட்டிருந்த செஞ்சி மஸ்தானுக்கு விரைவில் பதவி கிடைத்ததற்கு பின்னால் ஒரு பெரிய பிளாஸ்பேக் இருக்கிறது. மாவட்டச் செயலாளர் பதவியும் பறிபோய், அமைச்சர் பதவியும் காலியாகி, 7 மாதங்கள் ஆன பிறகு மறுபடியும் குறுகிய காலத்தில் மாவட்ட செயலாளர் ஆகியிருக்கிறார் செஞ்சி மஸ்தான். இது உடன்பிறப்புகள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது மட்டும் இல்லாமல் இது எப்படி சாத்தியம் என புருவத்தை உயர்த்த வைத்திருகிறது. அவருக்கு வழங்கிய பதவிகள் பறிக்கப்பட்டாலும் அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தொடர்ச்சியாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, கட்சி உறுப்பினர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்தது என கட்சி வேலையை மட்டுமே உற்சாகம் குறையாமல் பார்த்து வந்திருக்கிறார் செஞ்சி மஸ்தான்.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த புகழேந்தி வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் காலமானதால் ஏற்பட்ட காலியிடத்துக்கு மாவட்டப் பொறுப்பாளராக வன்னியரை நியமிக்கவே நினைத்தார் ஸ்டாலின். ஆனால், அப்போது பொன்முடியின் அழுத்தம், உதயநிதியின் ஆதரவால் பொன்முடி மகனும், முன்னாள் கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான கௌதம சிகாமணி நியமிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கையில் திமுகவின் பச்சை நாடகம்… புட்டுப்புட்டு வைத்த சீமான்..!
இதன் எதிரொலியாக விழுப்புரம், வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த அப்போதைய அமைச்சராகவும் செஞ்சி மஸ்தானை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ஒரு வன்னியரை நியமிக்க முடிவு செய்தது திமுக தலைமை. விழுப்புரம் தெற்கு, வடக்கு இரு மாவட்டங்களிலும் வன்னியர் அல்லாத மாவட்டச் செயலாளர்களை திமுக வைத்திருந்தால், விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் இதையே பாமக ஒரு பிரச்சினையாக கிளப்பும் என்பதால் அப்போது இந்த முடிவை எடுத்தது திமுக தலைமை. இதனை மஸ்தானிடமே விளக்கி விட்டு, அவரை நீக்கிவிட்டு அவர் பரிந்துரைத்த, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த மாவட்ட அவைத் தலைவர் டாக்டர். சேகரை மாவட்ட செயலாளராக நியமித்தது திமுக தலைமை.
அடுத்து விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குள் செஞ்சி மஸ்தானின் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி மட்டும் வருகிறது. அந்த தொகுதியில் 260346 வாக்குகள் விசிக வேட்பாளருக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார் மஸ்தான். விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலேயே அதிக முன்னணி கொடுத்தது மஸ்தான் எல்லைக்குள் வரும் திண்டிவனம்தான்.

அதேநேரம் பொன்முடி தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திருக்கோவலூர் தொகுதியில் திமுக கூட்டணி விசிக வேட்பாளர் ரவிக்குமார், அதிமுக வேட்பாளரை விட 1898 ஓட்டுகள் குறைவாக பெற்றார். இப்படி 26 ஆயிரம் ஓட்டுகள் லீடிங் எடுத்துக் கொடுத்த மாவட்ட செயலாளர் மஸ்தான் பதவி இழந்ததும், சுமார் 2 ஆயிரம் ஓட்டுகள் குறைவாக எடுத்துக் கொடுத்த பொன்முடியின் மகன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதும் திமுகவிற்குள்ளேயே விநோதமாக பேசப்பட்டது. பிறகு மஸ்தான் அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். அதேவேளை விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட டாக்டர்.சேகர் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகங்களில் தலையிடுவதாக தலைமைக்கு பல புகார்கள் சென்றன.
இந்நிலையில் சமீபத்தில் விழுப்புரம் கள ஆய்வுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் சென்று வந்தார். அந்த விசிட்டுக்கு முன்னும், பின்னும் 'பென்' அமைப்பு முதல்வருக்கு சில ரிப்போர்ட்டுகளைக் கொடுத்தது. அதில் மாவட்டச் செயலாளர், அமைச்சர் என இரு பதவிகள் இல்லாதபோதும் மஸ்தான் கட்சிப் பணிகளில் தொய்வில்லாமல் செயல்பட்டு வருகிறார். கட்சியினரின் சுக -துக்க நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொள்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்பிறகே செஞ்சி மஸ்தானுக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்கள் வரிப்பணத்தை வைத்து அரசியல் செய்வீங்களா.? மத்திய அரசை விளாசி தள்ளிய தமிழக அமைச்சர்..!