தமிழனத்தையும், திருவள்ளுவரையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கண்டித்துள்ளார்.
திருவள்ளுவருக்கு காவி உடை:
ஆண்டுதோறும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவள்ளுவர் தினமாக தமிழக அரசால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இன்றைய தினம் திருவள்ளுவர் தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர் திருவள்ளுவரின் உருவப்படம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பரபரக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு; 19 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் - காரணம் என்ன?

வழக்கம் போல் ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் திருவள்ளுவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவரின் உருவப்படம் காவி உடையில் இருந்தது சர்ச்சையைக் கிளப்பியது. அதுபோதாது என்று, ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவும் பரபரப்பைக் கிளப்பியது.
திருவள்ளுவர் ஒரு சனாதனி:
அந்த பதிவில், " பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலர் திருவள்ளுவரை தேசம் ஆழ்ந்த நன்றியுடனும் மிகுந்த பக்தியுடனும் நினைவு கூர்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒவ்வொரு தனிநபருக்கும் அமைப்புக்கும் பொருந்தக்கூடிய ஒப்பற்ற வழிகாட்டியான திருக்குறளை வழங்கினார். பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும் நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தையும் அவர் நமக்கு கற்றுக் கொடுத்தார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஒரு விரிவான நல்லொழுக்கக் குறியீட்டை அவர் வகுத்தார். இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடும் அதேவேளையில், அவர் நமது அன்றாட வழிகாட்டியாக விளங்கி வருகிறார். எனவே அவர் தினமும் நினைவுகூரப்பட்டு கொண்டாடப்பட வேண்டும். திருவள்ளுவரின் சிறந்த பக்தரான பிரதமர் அவர்களுக்கு நன்றி. திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன."" என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது மட்டுமின்றி, அவர் ஒரு சனாதானி என்றும் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். இதனால் கடந்த ஆண்டை விட ஆளுநருக்கு வலுவான எதிர்ப்புகள் குவியும் என தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். அதன் தொடக்கத்தை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆரம்பித்து வைத்துள்ளார்.
ஆளுநரே வேண்டாம்:
ஆளுநரின் செயலைக் கடுமையாக விமர்சித்துள்ள செல்வப்பெருந்தகை, அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாடு அரசு சார்பில் திருவள்ளுவர் தினம், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு இன்று (15.01.2025) திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நடந்த திருவள்ளுவர் தின விழாவில் காவி உடையில் திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்திருக்கிறார்.

அய்யன் திருவள்ளுவருக்கு சாதி, மொழி, மதம் என்பது கிடையாது. அவருக்கு காவி உடை அணிந்து, சித்தரிப்பது ஏற்க முடியாது. ஆளுநர் ரவி, அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து வெளியிடுவது சட்டத்துக்கு புறம்பானது. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே இப்படி செய்வது கண்டனத்துக்குரியது. வருத்தத்துக்குரியது.
தமிழ்நாடு அரசை மட்டுமல்ல, தமிழனத்தையும், திருவள்ளுவரையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்” எனக்குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆரம்பமே இப்படியா? - பாலமேடு ஜல்லிக்கட்டில் போலீசார் - மாடுபிடி வீரர்கள் இடையே தள்ளுமுள்ளு!