விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி செய்த அமைச்சர், மாணவியின் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்ட எம்எல்ஏ, மூதாட்டிக்கு மூக்கு கண்ணாடி வழங்கிய எம்.பி.... இப்படி அரசியல்வாதிகள் பற்றி அவ்வப்போது சில Hook Up செய்திகள் வருவதை பார்த்திருப்போம்.. இவற்றில் பல விஷயங்கள் உண்மையாக இருக்கலாம், சில விஷயங்கள் இவர்களாக பரப்ப வைத்ததாக இருக்கலாம். எதுவாகினும் யாரேனும் ஒருவருக்கு உதவி கிடைத்ததா என்ற அளவுகோலில் அதற்கு வரவேற்பும் பொதுமக்களால் கொடுக்கப்படுவதுண்டு. தேர்ந்த அரசியல்கட்சிகள் செய்யும் வித்தைகளில் இதுவும் ஒன்று.

ஆனால், நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்று பழுத்த அரசியல்வாதிகளால் விமர்சிக்கப்படும் கட்சி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். ஆனால் சமீபகாலமாக விஜய் எடுக்கும் செயல்பாடுகள், அவரது பேச்சுகள் போன்றவை பாரம்பரிய கட்சிகளுக்கே சவால் விடுபவையாக அமைந்துள்ளன என்பதை மறுக்க முடியாது. கட்சித் தலைவரான விஜய்தான் இப்படி என்றால், அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் திராவிட கட்சிகளுக்கு இணையாக களப்பணியில் அசத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: விஜய் அடுத்த முதல்வரா..? அவருக்கென்ன சீனியாரிட்டி இருக்கு..? வெம்பி வெடித்த திருமா..!

அப்படி ஒருவர் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளரான அஜிதா ஆக்னல். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் விஜய் ரசிகர்களாக இருந்து தற்போது கட்சி நிர்வாகிகளாக மாறி வருவதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து தற்போது தவெக-வின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வருபவர் தான் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த அஜிதா ஆக்னல்.

கடந்த ஓராண்டாகவே அந்த மாவட்டத்தில் எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும் தவெக சார்பில் முன்கள வீராங்கனையாக களமாடுபவர் அஜிதா. அந்த வகையில் தவெக கட்சியின் தொண்டரான தர்மராஜ் என்பவர் கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் காலமானார். 5 வயது பெண் குழந்தையோடு அவரது மனைவி தவித்துப் போனார். அடுத்து என்ன செய்வது என்று தத்தளித்த அவரை நேரில் சந்தித்து பலரும் ஆறுதல் கூறினார்கள். ஆனால் இதுபற்றி தகவலறிந்த அஜிதா, நேரடியாக தர்மராஜின் வீட்டிற்கு சென்று அந்த 5 வயது குழந்தையை பள்ளியில் சேர்த்துள்ளார். அந்த செலவு மட்டுமல்லாது, உயர்கல்வி வரை ஆகும் செலவை தூத்துக்குடி மாவட்ட தவெக பார்த்துக் கொள்ளும் என்று உறுதி அளித்துள்ளார்.

அஜிதா ஆக்னலின் இந்த செயல் தூத்துக்கு மாவட்ட தவெக தொண்டர்களிடம் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதாம். நாளைக்கு நமக்கு ஏதேனும் ஒன்று என்றால், நம் கட்சி வந்து நிற்கும் என்ற பேச்சு பரவலாக உள்ளது. அதாவது திராவிட கட்சிகள் முன்பு என்ன செய்தனவோ, அதனை இப்போது தவெகவினர் அச்சுப் பிசகாமல் செய்து வருகின்றனர். இது அரசியல் ஆதாயத்திற்காக என்று எளிதில் கூறி புறந்தள்ளி விடலாம், ஆனால் இதன்மூலம் ஒரு குழந்தையின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் எனில் இது பாராட்டத்தக்கதே என்று கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் இருக்கும்வரை தவெகவுக்கு டெபாசிட்கூட கிடைக்காது..! நிர்வாகிகள் அதிருப்தி..!