அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு இன்று விருந்தைத் தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஏப்.25இல் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் கூட்ட உள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தேர்தலில் வெற்றி பெற தடுமாறுகிறது. அதே நேரத்தில் திமுக கூட்டணி சிந்தாமல், சிதறாமல் 2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேர்தல்களைச் சந்தித்து வெற்றி பெற்று வருகிறது. இதனால், அதிமுக வலுவான கூட்டணி அமைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தது. இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தற்போது பாஜகவுடன் கூட்டணியை அதிமுக உறுதி செய்துள்ளது.

பாஜகவுடன் 2023இல் கூட்டணியை முறித்த அதிமுக, அக்கட்சியுடன் எப்போதும் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். இதையெல்லாம் சிறுபான்மையினருக்கு விளக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியும் இருந்தார். ஆனால், தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், அதற்கான உண்மையான காரணம் அறியாமல் சில நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து விலகினர். மேலும் அதிமுக மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் குழப்பத்தில் உள்ளனர். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினரிடம் அதை விளக்க முடியாமல் மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை பழனிசாமி நாளை மறுநாள் (ஏப்.25) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு கூட்ட உள்ளார். இக்கூட்டத்தில் பாஜகவுடன் அதிமுக ஏன் கூட்டணி அமைத்துக்கொண்டது என்பது தொடர்பாக பழனிசாமி விளக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இது திமுகவை வீழ்த்துவதற்கான கூட்டணி மட்டுமே. கொள்கை கூட்டணி இல்லை. பாஜக கொள்கைகளை அதிமுக ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்பதை சிறுபான்மையினரை சந்தித்து விளக்குமாறு மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அறிவுறுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் இன்று எடப்பாடி பழனிசாமி விருந்து அளிக்க உள்ளார். வரும் மே 2ஆம் தேதி செயற்குழு கூட்டமும் கூட உள்ளது.
இதையும் படிங்க: 2026இல் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்.. எடப்பாடியார் முதல்வர் ஆவார்.. மாஜி அமைச்சர் பா.வளர்மதி தாறுமாறு!
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழல் விவகாரம்.. யாரும் பதிலளிக்காததால் முறைகேடு நிரூபணம்.. எடப்பாடி அட்டாக்!!