தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்திலிருந்து பெங்களூர் வழியாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், காஷ்மீரில் மிகவும் துயரமான துக்கமான நிகழ்வு நடந்துள்ளது. தமிழ்நாடு கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த நடுத்தர மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என அனைவருமே அங்கு சுற்றுலா சென்று இருந்தனர்.
இந்த நிலையில் திட்டமிட்டு அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இப்படி எல்லாம் ஒரு மனிதன் செய்வானா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது எல்லாம் மதமும் சமம் என்று நினைக்கக்கூடிய மனிதன் நான் ஆனால் தீவிரவாதிகள் அப்படி நினைப்பதில்லை.

சுற்றுலா சென்று இருந்த மக்களை இந்துவா? முஸ்லிமா? என கேட்டு 26 நபர்களை சுட்டு படுகொலை செய்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அரசு முறை பயணமாக இரண்டு நாட்கள் சவுதி அரேபியா சென்று இருந்த பிரதமர் மோடி ஒரே நாளில் திரும்பி வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதே வேளையில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியும் இந்தியாவில் இருக்கிறார்.
நம்முடைய அரசு கொடுக்கும் பதிலடி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மக்கள் ஆக்ரோஷமான பதிவுகளை சமூக வலைதளத்தில் பதிவிடுகின்றனர். அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் அரசும் அரசு இயந்திரங்களும் தகுந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ? அதை செய்வார்கள் தீவிரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
இதையும் படிங்க: அண்ணாமலையை தவிர்த்த நயினார் நாகேந்திரன்... தொண்டர்களுக்கு போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!

மக்கள் தொடர்ந்து காஷ்மீர் செல்பவர்கள் செல்ல வேண்டும். இந்த தாக்குதலுக்கு பயந்து நாம் நம்முடைய வேலைகளை நிறுத்தினால் அது தீவிரவாதிகள் நமக்கு கொடுக்கக்கூடிய பயமாக மாறிவிடும். அதை நாம் ஏற்படுத்தி விடக்கூடாது. இந்த விவகாரத்தில் அரசியல் பேசுபவர்கள் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற அன்று கூட பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளை பொறுத்தவரை இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க வேண்டும். அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டும் என தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறார்கள். காஷ்மீரில் 370 என்ற சட்டப்பிரிவை எடுத்த பிறகும் அனைத்தும் கட்டுக்குள் தான் இருக்கிறது இன்று துர்திஷ்ட்டவசமாக தாக்குதல் நடந்துள்ளது.

மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அரசு இயந்திரங்கள் விரைவில் பதில் அளிக்கும். இதில் நமது தலைவர்கள் அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும். அங்கு தீவிரவாதிகள் மக்களை வரிசையாக நிறுத்தி இஸ்லாமியர்களா இந்துவா என கேட்டு இந்து மக்களை சுட்டுக் கொன்றதாக அங்கு பாதிக்கப்பட்ட மக்களே பேட்டி கொடுத்துள்ளனர்.
ஆனால் தாக்குதலுக்கு பிறகு காயமடைந்தவர்களை காப்பாற்ற முதலில் வந்தவர்களை இஸ்லாமியர்கள்தான். நம் நாட்டில் இஸ்லாமியர்கள், இந்து அனைவரும் சமம் தான். ஆனால் தீவிரவாதிகளிம் மனநிலை அப்படி இல்லை. மதத்தின் அடிப்படையில் தான் அவர்கள் தீவிரவாதம் செய்கின்றனர். தீவிரவாதத்தை தீவிரவாதமாகத் தான் நாம் பார்க்கிறோம்.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக பாகிஸ்தான் ராணுவ தளபதி காஷ்மீரை சேராதவர்கள் எல்லாம் காஷ்மீரில் வந்து குடியுரிமை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என தவறான தகவல்களை பரப்புரை செய்கிறார்கள். அவர்களுக்கு இந்தியா வளர்வது பிடிக்கவில்லை. அமைதியாக இருப்பதும் பிடிக்கவில்லை. தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் காலம் காலமாக சண்டை நடந்து வருகிறது. பாதுகாப்பு படை அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ஆனால் தற்போது பல நாட்கள் கழித்து அப்பாவி மக்கள்களை தீவிரவாதிகள் கொன்று உள்ளனர். இதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிரவாதம் முற்றிலும் வேரறுக்கப்பட வேண்டும். நிச்சயம் அது நடக்கும். இறந்தவர்கள் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தகவல்களையும் அரசு தெரிவிக்கும் என அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: யார் சிறந்த கொத்தடிமை என்பதில் போட்டி..! நாத்திகம் நாடகம்.. சேகர் பாபுவுக்கு அண்ணாமலை கண்டனம்..!