சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றுதான் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையம். இங்கு தினந்தோறும் பல லட்ச கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த விமான நிலையத்தில் இருந்து உள்நாடுகள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விமானங்கள் செல்கின்றன. அமெரிக்கா, சீனா, ஜப்பான் என்று உலகம் முழுக்க பல நாடுகளுக்கு இங்கிருந்து விமானம் செல்கிறது. கடந்த 2017-18 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை விமான நிலையத்தின் மூலம் சென்னை விமான நிலையத்தை 20.26 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வெகு விரைவில் அப்பகுதி மிகவும் நெரிசல் நிறைந்த பகுதியாக மாறிவிடும் என்பதோடு விமான போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் என கூறப்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக சென்னைக்கு வெளியே மற்றொரு விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி காஞ்சிபுரம் - அரக்கோணம் அருகே இருக்கும் பரந்தூர், மாண்டூர் ஆகிய இடங்கள் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் தான் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மீனம்பாக்கத்தில் இருந்து பரந்தூர் 70 கிமீ தொலையில் உள்ளது. மொத்தம் இந்த விமான நிலையம் 3800 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக முதலில் திட்டமிடப்பட்டது. மேலும் இதற்கான நிலம் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று, திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்.. நாளை நமதே.. நம்பிக்கை ஊட்டும் விஜய்!!

ஏகனாபுரத்தை மையப்படுத்தி நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் 1000-வது நாளை எட்டியுள்ளது. இதுவரை கிராம மக்கள் மொட்டை அடிக்கும் போராட்டம், கருப்பு கொடி போராட்டம், நீர்நிலைகளில் இறங்கி போராட்டம், பிச்சை எடுக்கும் போராட்டம், சட்டமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம், கண்களை கட்டி போராட்டம் என பல போராட்டங்களை நடத்தி உள்ளனர். மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் கலந்துக் கொண்டு, தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்யும் மக்களின் இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.

இந்தப் போராட்டம் 1,001-வது நாளாக இன்றும் நீடித்துக் கொண்டிருக்கிறது. இத நிலையில் பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்த கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார்.. மௌனம் கலைத்த சீமான்!!