இந்த ஆண்டுக்கான மகரஜோதி நாளை (14/1/25) அன்று ஏற்றப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேவசம்போர்டு முழுவீச்சில் செய்து வருகிறது.
மகரஜோதிக்காக கடந்த மாதம் சபரிமலையில் நடைதிறக்கப்பட்டு நாள்தோறும் நெய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மகரஜோதியின் போது ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். அவை பந்தள ராஜ குடும்பம் வசம் பேணி பாதுகாக்கப்பட்டு வருவது வழக்கம். அந்தவகையில் நேற்று பந்தள ராஜகுடும்ப பிரதிநிதி திருக்கோட்ட நாள் ராஜராஜ வர்மா தலைமையில் நகைகள் வெளியே எடுக்கப்பட்டன.

மூன்று சந்தன பெட்டிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட அவை பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோயிலக்கு கொண்டு வரப்பட்டன. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் அவை சபரிமலை நோக்கி ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகின்றன. அந்த ஆபரணங்களை சரங்குத்தி என்ற இடத்தில் ராஜகுடும்பத்தில் இருந்து தேவசம்போர்டு பெற்றுக் கொள்ளும். தேவசம்போர்டு சார்பில் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு, மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஆகியோர் நகைகளை பெற்றுக் கொள்வார்கள். நகைகள் அணிவிக்கப்படுவதற்கு முன்னதாக சுத்திகிரியை பூஜைகள் இன்றும், நாளையும் செய்யப்படும். நகைகள் கொண்டுவரப்படும் ஊர்வலத்திற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: போலீஸ் தேர்வில் 'காப்பி' அடித்தவர் சிக்கினார்: காதுக்குள் சிறிய 'ப்ளூடூத்' சொருகி, 'சினிமா பாணி'யில் நூதன மோசடி..

ஒருபுறம் திருவாபரணங்கள் கொண்டுவரப்படும் அதேவேளையில் எருமேலியில் அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது. மகரஜோதியை முன்னிட்டு கொண்டு வரப்படும் இந்த நகைகள் நாளை மாலை 6.25 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். அப்போது சிறப்பு தீபாராதனை செய்யப்படும். இங்கு தீபம் ஏற்றிய பின்னர் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும்.
மகரஜோதிக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அட்டத்தோடு முதல் நீலிமலை வரையிலான பாதை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. பம்பை நுணங்கான் பகுதியில் தற்காலிக பாலம் போடப்பட்டுள்ளது. மகரஜோதியின் போது புல்மேடு பகுதியில் பக்தர்கள் நெரிசல் மிகுந்து காணப்படும் என்பதால் பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி ஆகிய 2 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்றும், நாளையும் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்த 50 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சபரிமலை ஐயப்பனைக் காண அனுமதி என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. ஸ்பாட் புக்கிங் மூலம் ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தேவசம்போர்டு தெளிவுபடுத்தி உள்ளது. எனவே சபரிமலைக்கு இன்றோ, நாளையோ செல்லக்கூடிய பக்தர்கள் ஆன்லைன் புக்கிங்கை உறுதி செய்து கொண்டால் நல்லது.
திருவாபரணம் பூட்டப்பட்டு காட்சி தரும் ஐயப்பனை வருகிற 18-ந் தேதி வரை பக்தர்கள் தரிசிக்கலாம். 19-ந் தேதி பந்தள ராஜ குடும்பத்தினர் தரிசனம் செய்த பின்னர் நடை அடைக்கப்படும்.
இதையும் படிங்க: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியை தாக்கிய பேருந்து நடத்துனர்: 10 ரூபாய் டிக்கெட் பிரச்சினையால் விபரீதம்..