விருப்ப ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டி பிடித்துள்ளனர்.
ஜாகீர் உசேன் கொலை வழக்கு:
திருநெல்வேலி டவுனில் தடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர், நேற்று ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு, தெற்கு மவுன்ட் சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.

இதையும் படிங்க: போதையில் நண்பரை துப்பாக்கியால் சுட்டவர் கைது.. கம்பி குத்தியதாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி நாடகம்..!
நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள 36 சென்ட் இடம் தொடர்பாக ஜாகிர் உசேன் பிஜிலிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த பிரமுகர் ஒருவருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஜாகிர் உசேன் பிஜிலி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் அளிக்கப்பட்டு, டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே இந்தக் கொலை நடைபெற்றது தெரியவந்துள்ளது.

இதனிடையே, கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாகவும், நெல்லை முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் முத்தவல்லியாக இருந்தவர் என்பதாலும் காவல்துறைக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டது. மேலும் இறப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக நிலத்தகராறில் தன்னை கொலை செய்ய சதி நடப்பதாகவும், தனது உயிரைக் காக்கும் படியும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து ஜாகீர் உசேன் வெளியிட்ட வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
முக்கிய நபர் மீது துப்பாக்கிச்சூடு:
இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்ட கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர், திருநெல்வேலி 4வது நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். இதைத் தொடர்ந்து முக்கிய நபரான தௌஃபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், தௌஃபிக் திருநெல்வேலி பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெட்டியாப்பட்டியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது தெளஃபிக் தான் மறைந்து வைத்திருந்த அரிவாளால் தலைமைக் காவலர் ஆனந்தை தாக்கிவிட்டு, தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதனால் போலீசார் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் காயமடைந்த முகமது தௌஃபிக் மற்றும் தலைமைக் காவலர் ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயற்சி.. சித்தூர் கும்பலை மடக்கி பிடித்த போலீஸ்..!