உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் ஆண்டவர், கடந்த 2013-ல் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2013-ல் இருந்து 12 ஆண்டுகளாக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வழி நடத்தினார்.

இந்நிலையில் போப் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி 14ம் தேதி முதல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். ரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு மற்றும் இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது. பிப்ரவரி 23ம் தேதி போப் பிரான்சிஸ்க்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
இதையும் படிங்க: போப் பிரான்சிஸ் மறைவு.. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல்..!

இதனால், அவர் மருத்துவமனையில் தங்கி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து 5 வாரங்களாக சிகிச்சையில் இருந்து வந்த போப் பிரான்சிஸ் சற்று உடல் தேறிய நிலையில், மார்ச் 23ம் தேதி வாடிகன் திரும்பினார். வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்த போப் பிரான்சிஸ், ஈஸ்டர் பண்டிகையையொட்டி வாடிகன் நகருக்கு வந்தார். அங்கு வாடிகன் சதுக்கத்தில் கூடியிருந்த மக்களை பார்த்து மகிழ்ச்சியில் கையசைத்ததுடன், அனைவருக்கும் ஈஸ்டர் தின வாழ்த்து தெரிவித்து, அங்கிருந்தவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.

இந்நிலையில் போப் பிரான்சிஸ் தனது 88வது வயதில் நேற்று காலமானார். வாடிகனில் உள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. உடனே ரோம் நகரம் முழுவதிலும் உள்ள அனைத்து ஆலயங்களின் மணிகளும் ஒலிக்க விடப்பட்டன. போப் பிரான்சிஸின் மறைவால் ரோம் நகரம் முழுவதுமே சோகத்தில் ஆழ்ந்தது. போப் பிரான்சிஸ் மறைவையடுத்து இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு வரும் சனிக்கிழமை காலை 8:30 மணி அளவில் நடைபெறும் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர் பசிலிகாவில் வைத்து இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

இந்த இறுதிச்சடங்கு நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவப்பு அங்கிகளுடன், பிஷப் ஆடை போப் பிரான்சிஸுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. சாண்டா மார்டா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸின் உடலுக்கு பலர் அஞ்சலை செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்..!