ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் கடந்த 22-ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பாகிஸ்தானில் இருந்து இயங்குகிறது.
பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலத்த கண்டனத்தை தெரிவித்து உள்ளன. எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்த இந்தியா, பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட போகாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

பாகிஸ்தானின் நீர்பாசனத்துக்கு தேவைப்படும் 93 சதவீத தண்ணீர், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் மூலமாகவே கிடைப்பதால், அந்நாட்டின் விவசாயத்திற்கான முதுகெலும்பே சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டால் பாகிஸ்தானில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். 80 சதவீத விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் அந்த நாடு அலற தொடங்கியுள்ளது.
இந்தியாவின் இந்த அதிரடி முடிவால், பாகிஸ்தானில் கடன் சுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் புலம்பெயர்தல் அதிகரிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் இந்த மரண அடியால், அச்சம் அடைந்து இருக்கும் பாகிஸ்தான் அடாவடியாக பேசி வருகிறது. சிந்து நதி நீர் நிறுத்தப்படால் அதை போராகவே கருதுவோம் என்று தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும் - பிலாவல் பூட்டோ பினாத்தல் பேச்சு..!

தனது வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்கவும் தடை விதித்துள்ளது. எல்லையிலும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியாவும் சரியான பதிலடி கொடுத்து வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் பூட்டோ ஆணவத்துடன் பேசியிருக்கிறார்.
பாகிஸ்தானில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிலாவல் பூட்டோ, "இந்தியாவுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.சிந்து நதி எங்களுடையது. தொடர்ந்து எங்களுடையதாகவே இருக்கும். ஒன்று நமது தண்ணீர் அந்த நதியில் ஓடும். இல்லையென்றால் அவர்களின் ரத்தம் ஓடும். தங்கள் உள்நாட்டு பாதுகாப்பில் கோட்டை விட்ட இந்தியா, மக்களின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தானை பலிகடா ஆக்குகிறது என்றும் பேசினார்.

பிலாவலின் பேச்சு இந்தியாவின் கோபத்தை மேலும் கிளறி இருக்கிறது. பிலாவல் பூட்டோ சர்தாரியின் பேச்சை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கண்டித்தார். பிலாவல் பூட்டோ ஒரு முட்டாள்; இது வெறும் ஆரம்பம்தான். பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பெரும் விலையை கொடுக்க வேண்டியிருக்கும். பிலாவலுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் அவர் இப்படித்தான் கத்திக்கொண்டு இருப்பார் என்று அமைச்சர் ஹர்தீப் சிங் கூறினார்.
பிலாவல் பூட்டோவின் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பாகிஸ்தானின் அச்சுறுத்தல், மிரட்டல்களுக்கு எல்லாம் இந்தியா பயப்படாது. பயங்கரவாதத்தை பரப்புவதற்கு மட்டும்தான் பாகிஸ்தானின் வேலையாக இருக்கிறது. பாகிஸ்தான் மக்கள் கூட இதுபோன்ற பேச்சுகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பியூஸ் கோயல் கூறினார்.
இதையும் படிங்க: தேசப்பணிக்கு தயார்..! எதுவும் எங்களை தடுக்காது.. ராணுவம், கடற்படை அறிவிப்பால் பதற்றம்!!