ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சர்வதேச அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த 48 மணி நேரத்திற்குள் ஏப்ரல் 24ம் தேதி ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து இந்தியா ஏவுகணை சோதனை நடத்தியது. அரபிக் கடலில் இருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. இதற்கிடையில் இந்தியா உடனான ஷிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்த பாகிஸ்தான், அந்த ஒப்பந்த விதிகளை மீறி எல்லையில் தாக்க தொடங்கியது. இதற்கு இந்த ராணுவம் தாக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந் அரபிக்கடலில் நிறுத்தப்பட்டது.

ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலில் மிக்-29கே போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் காஷ்மீரின் நிலை குறித்து ஆய்வு செய்ய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி வெள்ளியன்று ஸ்ரீநகருக்கு வந்தார். பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பயங்கரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் தரப்பு கலக்கம் அடைந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தனது குடும்பத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியர்களை சீண்டினால்.. எதிரிகளுக்கு புரியும் மொழியில் பதிலடி இருக்கும்.. எச்சரிக்கும் யோகி..!

பாகிஸ்தான் ராணுவத்தின் பல அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை தனியார் விமானங்களைப் பயன்படுத்தி இங்கிலாந்து மற்றும் நியூ ஜெர்சிக்கு அனுப்பியுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றமான சூழலில் இந்தியா பதிலடியில் இறங்கினால் என்ன நடக்கும் என்பதை உணர்ந்து இவ்வாறு செய்துள்ளனர். இந்த நேரத்தில் இந்திய ராணுவத்தின் அதிகாரபூர்வ x தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் எனக் குறிப்பிட்டு ராணுவத்தினரின் பயிற்சி காட்சியையும் வெளியிட்டுள்ளது. நாங்கள் எதற்கும் பயப்படவில்லை, எதுவும் எங்களை தடுக்காது எனவும் பதிவிட்டுள்ளது. இதேபோல் இந்தியாவின் 5 போர்க்கப்பல்களின் புகைப்படத்தை வெளியிட்டு தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது. இதன்படி ஒற்றுமையில் தான் சக்தி இருக்கிறது.. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எப்படி வேண்டுமானாலும் தயாராக இருக்கிறோம் எனும் வார்த்தைகளோடு 5 போர் கப்பல்களின் புகைப்படங்களை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஒருத்தனும் மிஞ்ச கூடாது.. தேடித்தேடி அழிக்கும் ராணுவம்.. நேற்றும் 3 பயங்கரவாதிகள் வீடு தகர்ப்பு..!