பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை இந்தியா வேட்டையாடும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 27 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவதிகளின் தாக்குதல் சம்பவம் உலக நாடுகளை அர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதுகுறித்து அறிந்த பிரதமர் மோடி, சவூதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பியதோடு தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக நேற்று ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகருக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்தடுத்த பல்வேறு கட்ட ஆலோசனைகளை பாதுகாப்புப் படையினருடன் மேற்கொண்டார். மேலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்த பஹல்காம் பகுதியையும் அமித்ஷா இன்று பார்வையிட்டார். அனந்தநாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்தித்து அமித்ஷா ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: கைகளைப் பற்றி கதறி அழுத உறவுகள்.. அமித் ஷா சொன்ன ஒற்றை வார்த்தை...!

இன்று அமித்ஷா நடத்திய பல்வேறு கட்ட ஆலோசனைகளின் போது, பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார். இதேபோல மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத், முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இயக்கியவர்கள் யாராக இருந்தாலும் தக்க பதிலடி நிச்சயம் தரப்படும் என கடுமையாக எச்சரித்தார்.

மேலும் இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பஹல்காம் தாக்குதல் கோழைத்தனமானது. இதில் பல அப்பாவி மக்களின் உயிர்களை பறிகொடுத்துள்ளோம். இத்தகைய பயங்கரவாதத்தை நாம் சகித்துக் கொண்டிருக்க முடியாது. இந்த தாக்குதலை நடத்தியவர்களும் தூண்டிவிட்ட சக்திகளும் நிச்சயம் தண்டிக்கப்படுவர். இதற்கான பதிலடியை விரைவில் இந்தியா கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதல்.. உயிரிழந்த கேரள மாநிலத்தவர் உடல் கொச்சினுக்கு வருகிறது..!