பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று நடிகையும் அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளருமான விந்தியா பேசினார்.
சைவம், வைணவம், பெண்கள் குறித்து தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேசிய அமைச்சர் பொன்முடியைக் கண்டித்துஅதிமுக மகளிரணி சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் நடிகையுமான விந்தியா பங்கேற்று பேசினார். “தமிழகத்தில் திமுக ஆட்சியில் கல்லூரி மாணவிகள் முதல் முதியோர் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் தொல்லையால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். பெண்களின் சாபம் பொல்லாதது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

திமுக ஆட்சி முடிய இன்னும் 10 மாதங்கள்தான் உள்ளன. இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை பெண்களை அவமதிப்பு செய்த கட்சி திமுக ஆகும். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் திமுகவினரை கண்ட்ரோலாக வைத்திருக்க முடியவில்லை. அவுட் ஆப் கன்ட்ரோல் ஆகிவிட்டது. இந்தியை ஒழிப்போம் என்பவர்கள், சாராயத்தை ஒழிப்போம் என்று கூற வேண்டியது தானே. ஆனால், அதைச் சொல்ல மாட்டார்கள். திமுகவினர் மக்களை ஏமாற்றுகின்றனர்.

சைவம், வைணவம், பெண் குறித்து அமைச்சர் பொன்முடி கேவலமாகப் பேசி உள்ளார். ஏன் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யவில்லை? ஏன் என்று கேட்டால், அவரை கட்சி பொறுப்பில் இருந்து தூக்கி விட்டோம் என்று சொல்கிறார்கள். அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி வீசுங்கள். அவர் மீது வழக்குப் பதிவு செய்யுங்கள். சவுக்கு சங்கர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போலீஸார், பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகின்றனர்?” என்று அவர் பேசினார்.
இதையும் படிங்க: இந்து சமயங்களை இழிவுபடுத்தியுள்ளார் பொன்முடி - உயர்நீதிமன்றம் அதிரடி..!
இதையும் படிங்க: 2026இல் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்.. எடப்பாடியார் முதல்வர் ஆவார்.. மாஜி அமைச்சர் பா.வளர்மதி தாறுமாறு!