காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் வெளிப்பாடாக, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்ககு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் தூதருக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று நள்ளிரவு சம்மன் அனுப்பியது. மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது இன்று நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: இனி பாகிஸ்தான் தப்பிப்பது கஷ்டம்... இந்தியாவுக்கு ஆதரவாக ஆயுதங்களை குவிக்கத் தயாராகும் உலக நாடுகள்..!

இந்த நடவடிக்கைகளால் கோபமடைந்த பாகிஸ்தான், சிம்லா ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் வெடிக்கும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு இன்று அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டன. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

மத்திய அரசுக்கு அனைத்து வகைகளிலும் உதவியாக இருப்போம் என்றார். இதனைத் தொடர்ந்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார். ஜம்மு காஷ்மீர் செல்லும் ராகுல் காந்தி, பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பஹல்காம் பகுதிக்குச் செல்கிறார். பயங்கரவாதிகளின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் சுற்றுலா பயணிகளை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். மேலும் ராணுவ தளபதி உள்ளிட்டோரும் ஜம்மு காஷ்மீர் விரைகின்றனர். அங்கு பாதுகாப்பு நிலவரம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவாக வீடியோ... அஸ்ஸாம் எம்.எல்.ஏ அதிரடி கைது!!