காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான தொழிலதிபர் ராபர்ட் வத்ரா, பஹல்காம் தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி சிக்கலில் மாட்டிக்கொண்டார். ராபர்ட் வத்ராவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக, தீவிரவாதிகளுக்கு ஆதரவாகப் பேசும் வத்ரா மன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நேற்றுமுன்தினம் சுற்றுலாப்பயணிகள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன. பஹல்காம் தாக்குதல் குறித்து ராபர்ட் வத்ரா கூறுகையில் “எப்போதெல்லாம் வகுப்புவாத சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நாட்டில் இருக்கும் பிரிவினை, அண்டை நாடுகளுக்கு லாபமாக இருக்கிறது. அரசியலையும், மதத்தையும் பிரித்து வைக்கவேண்டும், அரசியல் கட்சிகள் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: ஐ.நாவை விட்டு தூக்கணும்.. பாகிஸ்தானுக்கு எதிராக மதுரை ஆதீனம் ஆவேசம்...!

தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தபோது, சுற்றுலாப்பயணிகள் அடையாள அட்டையை பார்த்து, முஸ்லிம் அல்லாதவர்களை குறிவைத்து தாக்கியுள்ளனர், பிரதமருக்கும் செய்தி அனுப்பியுள்ளனர். ஏன் இது நடக்கிறது. ஏனென்றால், இந்தியாவில் முஸ்லிம்கள் தவறாக நடத்தப்படுவதாக தீவிரவாதிகள் நினைக்கிறார்கள்” எனத் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் இது என்னுடை தனிப்பட்ட கருத்து, காங்கிரஸ் கட்சி சார்பாகவோ, தன் குடும்பத்தினர் சார்பாகவோ பேசவில்லை என ராபர்ட் வத்ரா தெரிவித்தார்.
மேலும் “சிறுபான்மையினர் ஒதுக்கப்படுவதாக நான் உணர்கிறேன். அவர்கள் தொழுகை நடத்தும்போது, அவர்கள் தங்கள் கூரைகளில் தொழ அனுமதிக்கப்படுவதில்லை. வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் சிறுபான்மையினர் சாலையில் தொழுதால் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். மசூதிகள் குறித்து சர்வே செய்யப்படுகிறது.

சிறுபான்மையினருக்காக கடைசியாகப் பேசியபோது அமலாக்கப்பிரிவு எனக்கு சம்மன் அனுப்பியது, தவறு நடக்கும்போதெல்லாம் தொடர்ந்து குரல் எழுப்புவேன். ஒரு மதத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் கடவுள்களையும் நம்பிக்கைகளையும் சாலைகளிலும் கொண்டாடலாம். நாம் அனைவரும் அவற்றுக்கு ஒத்துழைக்க வேண்டும். முஸ்லிம்கள் தொழுகை நடத்தும்போது, அவர்கள் ஏன் தடுக்கப்படுகிறார்கள்? நாம் ஒற்றுமையாக இல்லாவிட்டால், நாம் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்போம், எல்லையோர நாடும் இதைப் பயன்படுத்திக் கொள்ளும்” எனத் தெரிவித்தார்.

ராபர்ட் வத்ராவின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் நளின் கோலி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ ராபர்ட் வத்ராவின் கருத்துக்கள் முற்றிலும் கண்டிக்கத்தக்கவை. இதேபோலத்தான் தீவிரவாதிகளும் தங்களின் தீவிரவாதத்தை நியாயப்படுத்த பேசுவார்கள். இந்த கொடூரமான தாக்குதலுக்கு எதிராக தேசமே ஒற்றுமையாக இருக்கும்போது, அதில் அரசியல் செய்ய வேண்டும் என்று ராபர்ட் வத்ரா முயல்கிறார் என்று தெளிவாகத் தெரிகிறது. இந்த பேச்சுக்கு ராபர்ட் வத்ரா மன்னிப்புக் கோர வேண்டும்.
ராபர்ட் வத்ராவின் பேச்சைப் பார்க்கும்போது காங்கிரஸ் கட்சி இரட்டைவேடம் போடுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னவிதமான நீதியை பெற்றுத்தர ராபர்ட் கோருகிரார். இது குறித்து காங்கிரஸ் கட்சி தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும், ராபர்ட் வத்ரா மன்னிப்புக் கோர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா எக்ஸ் தளத்தில் கூறுகையில் “தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் கண்டிப்பதற்கு பதிலாக வெட்கமின்றி ஆதரித்து வத்ரா பேசுகிறார். கர்னால் பகுதியைச் சேர்ந்த உயிரிழந்தவரின் குடும்பத்தினரை வத்ரா நேரடியாகச் சென்று பார்க்க வேண்டும், நம்முடைய ராணுவம் வலுவானது, நிச்சமயாக பாகி்ஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் இதை எளிதாக எடுக்கமாட்டோம். நாம் உண்மையாகவே ஒற்றுமையாக இருக்கிறோம், ஒன்றுபட்டு, எந்தத் தாக்குதலிலும் பாதிக்கப்படமாட்டோம் என்பதை நிரூபிப்போம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏவுகணைச் சோதனை? - இந்தியாவின் கோபத்தை சீண்டும் பாகிஸ்தான்...!