பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சைஃப் அலிகான் வீட்டிற்குள் நடந்ததால் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.
நடந்தது என்ன?
இன்று அதிகாலை 3 மணி அளவில் மும்பை பாந்த்ராவில் உள்ள சைஃப் அலிகானின் வீட்டிற்குள் திருடன் நுழைந்ததாக கூறப்படுகிறது. திருடன் வீட்டிற்குள் நுழைந்தபோது சில வேலைக்காரர்கள் தூக்கத்திலிருந்து விழித்துள்ளனர். வீட்டில் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்த சைஃப், வெளியே வந்து திருடனைப் பிடிக்க முயன்றுள்ளார். அப்போது திருடன் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: பிரபல நடிகருக்கு 6 இடங்களில் கத்திக்குத்து …இந்தியா முழுவதும் அதிர்ச்சி..! இன்று அதிகாலை 3 மணிக்கு நடந்த படுபயங்கரச் சம்பவம்…!
இந்த சம்பவத்தில் அவர் பலத்த காயமடைந்தார், உடனடியாக அவரது குடும்ப உறுப்பினர்கள் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் தற்போது சைஃபுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவர்கள் சொல்வது என்ன?
நடிகருக்கு ஆறு இடங்களில் கத்துக்குத்து உள்ளதாகவும், அவற்றில் இரண்டு ஆழமானவை என்று லீலாவதி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் நிராஜ் உத்தமணி தெரிவித்துள்ளார்.

லீலாவதி மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி டாக்டர் நிராஜ் உத்தமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சைஃப் அலி கான் தனது பாந்த்ரா வீட்டில் அடையாளம் தெரியாத நபரால் குத்தப்பட்டு அதிகாலை 3:30 மணிக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு ஆறு கத்திக்குத்து காயங்கள் உள்ளன. அதில் இரண்டு ஆழமான காயங்கள் இருக்கிறது. இதில் ஒன்று முதுகெலும்புக்கு அருகில் உள்ளது. அவருக்கு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதின் டாங்கே, காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் லீனா ஜெயின் மற்றும் மயக்க மருந்து நிபுணர் டாக்டர் நிஷா காந்தி தலைமையிலான மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை செய்து வருகிறது."
நரம்பியல் அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், தற்போது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் அறுவை சிகிச்சை செய்து வருகிறார்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிரடி ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்
திருடனைப் பிடிக்க மும்பை காவல்துறையும் குற்றப்பிரிவு போலீசாரும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். சைஃப் அலி கானின் மனைவி நடிகை கரீனா கபூர் கான் மற்றும் அவர்களது குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, வழக்கு தொடர்பான விவரங்களை போலீசார் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான் சைப்ஃ அலிகான், தென்னிந்திய திரையுலகில் வில்லனாக கலக்கி வருகிறார். ஓம் ரவுத் இயக்கிய இளம் கிளர்ச்சி நட்சத்திரம் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படத்தில் சைஃப் ராவணனாக நடித்தார். அதன் பிறகு, கடந்த ஆண்டு சூப்பர் ஹிட் படமான தேவாரா படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு வில்லனாக பைரா என்ற வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரபல நடிகருக்கு 6 இடங்களில் கத்திக்குத்து …இந்தியா முழுவதும் அதிர்ச்சி..! இன்று அதிகாலை 3 மணிக்கு நடந்த படுபயங்கரச் சம்பவம்…!