''தேர்தல் அரசியலில் கூட்டணி அமைப்பதற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. எந்த முடிவையும் எடுக்க முடியும். நாமே அதை உருவாக்கிக் கொள்ளவும் முடியும்'' என விளக்கமளித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
இதுகுறித்து பேசிய அவர், ''திமுகவை மட்டுமே நாங்கள் நம்பி இல்லை என்று சொல்லவில்லை. திமுகவை மட்டுமே நம்பி கிடக்கிறோம். அவர்களை நக்கி பிழைக்கிறோம் என்று சில அரசியல் அறியாமையில் சுழலக் கூடியவர்கள் விமர்சிக்கிறார்கள் என்று எமது கட்சி தோழர்களுக்கு நான் கொடுத்த விளக்கம் இது. அதாவது தேர்தல் அரசியலில் கூட்டணி அமைப்பதற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. எந்த முடிவையும் எடுக்க முடியும். நாமே அதை உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.

அப்படிப்பட்ட வாய்ப்புகள் இருந்தும் கூட நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உறுதியாக இருப்பதற்கு எங்களுடைய தொலைநோக்கு பார்வையும் தமிழ்நாட்டு நலனும்தான் காரணம் என்று விளக்கும் வகையில் நமது தோழர்களுக்கு நேரலையில் பேசினேன். அது தவறாக திரித்து சொல்லப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை சிதறடிப்பதற்கு பல வகையிலும் பல முனையிலும் சதி முயற்சிகள் நடந்து வருகின்றன என்பதை அறிந்தவன் என்கிற முறையில் இதை நான் சுட்டிக்காட்டினேன். அவ்வளவுதான்.
இதையும் படிங்க: தேர்தலில் திமுக கூட்டணிக்கு 200 தொகுதிகள் கன்ஃபர்ம்.. அமைச்சர் எஸ். ரகுபதி தாறுமாறு.!!

விடுதலைச் சிறுத்தைகளை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள். இயக்கத் தொண்டர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கிற போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்கிற வழிகாட்டுதலையும் அந்த உரையில் தந்திருக்கிறேன்.
பேட்டிகளின்போது தூண்டிவிடுகிறார்கள். நீங்கள் திமுகவோடு கிடக்கிறீர்கள். இரண்டு இடங்களுக்காக அங்கே முடங்கி இருக்கிறார்கள். உங்கள் வளர்ச்சியில் உங்களுக்கு அக்கறை இல்லை. உங்கள் தலைவர் உங்களை கொண்டு போய் அப்படி முடக்கி வைத்திருக்கிறார் என்றெல்லாம் சொல்லி எமது தோழர்களை சீண்டுகிறார்கள். அதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது. கவனமாக இருக்க வேண்டும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம்மை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என்ற எச்சரிக்கையை செய்திருக்கிறேன், அவ்வளவுதான்.

அதாவது இழப்புகளை தாங்கிக் கொள்ளவும், பாதிப்புகளை ஏற்றுக் கொள்ளவும் ஒரு துணிச்சல் தேவை. ஒரு கூட்டணியில் சேருகிறபோது பல கதவுகளை திறந்து வைத்துக்கொண்டு கூட்டணியில் பேரம் பேசுவது என்பதுதான் வழக்கமான ஒரு நடைமுறை. நாங்கள் அவ்வாறு இல்லாமல் எங்களுக்கு எந்த சாதிய மதவாத சக்திகளோடும் உறவில்லை. எனவே நாங்கள் பாமகவுடனும், பாஜகவோடும் சேர மாட்டோம். அந்த கட்சிகள் இடம் பெறுகின்ற அணியிலும் சேர மாட்டோம் என்று சொல்கிறோம். அதற்கும் ஒரு துணிச்சல் தேவை என்று குறிப்பிட்டேன்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கேன்..! நான் கட்சி பதவியில் இருந்து விலக காரணம் இது தான்..! மனம் திறந்த துரை வைகோ..!