2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம் மற்றும் மிட்சல் மார்ஷ் களமிறங்கினர். மார்க்ரம் 33 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நிக்கோலஸ் பூரன் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் அப்துல் சமத் களமிறக்கப்பட்டார்.

இன்னொரு பக்கம் மிட்சல் மார்ஷ் நிதானமாக ரன்கள் சேர்க்க, முகேஷ் குமார் வீசிய 14வது ஓவரில் அப்துல் சமத் 2 ரன்களிலும், மிட்சல் மார்ஷ் 45 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் டேவிட் மில்லர் - பதோனி கூட்டணி களத்தில் இருந்தது. கடைசி ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்த பதோனி, 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் கடைசி 2 பந்து மீதமிருக்கும் போது லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். ஆனால் டக் அவுட்டாகி வெளியேறினார்.
இதையும் படிங்க: சொந்த மண்ணில் தடுமாறிய LSG... டெல்லி அணிக்கு 160 ரன்கள் இலக்கு!!

இதனால் லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து 160 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி தொடக்க வீரர்களாக அபிஷேக் பொரெல் மற்றும் கருண் நாயர் களமிறங்கினர். அபிஷேக் பொரெல் 36 பந்துகளில் அரைசதம் விளாசினார். 5 பவுண்ட்ரிகள் மற்றும் 1 சிக்ஸ் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் கருண் நாயர் 9 பந்துகளில் 2 பவுண்ட்ரிகள் மற்றும் 1 சிக்ஸ் அடித்து 15 ரன்களில் அவுட் ஆனார்.

பின்னர் வந்த அக்சர் படேல் – கே.எல்.ராகுல் கூட்டணி நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அக்சர் படேல் 20 பந்துகளில் 1 பவுண்ட்ரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்து 34 ரன்கள் குவித்திருந்தார். மறுபக்கம் கே.எல்.ராகுல் 42 பந்துகளில் அரைசதம் விளாசினார். 3 பவுண்ட்ரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடித்து 57 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார். இதன் மூலம் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: சிஎஸ்கே கம்பேக் கொடுக்கும்.. 2010இல் நடந்த மாயாஜாலம் திரும்பவும் நடக்கும்.. விடாமுயற்சியில் சிஎஸ்கே சிஇஓ!!