2025 ஐபிஎல் சீசனில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் லக்னோ அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக இளம் வீரர் ஷேக் ரஷீத்தின் அறிமுகம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

அறிமுக போட்டியிலேயே ஷேக் ரஷீத் 19 பந்துகளில் 6 பவுண்டரி உட்பட 27 ரன்கள் எடுத்து அசத்தினார். ரஷீத்தின் அபார ஆட்டம் காரணமாக சிஎஸ்கே அணியின் பவர் பிளே ஸ்கோர் 5 ஓவர்களில் 59 ரன்களாக உயர்ந்தது. சிஎஸ்கே அணியில் 2 ஆண்டுகளாக பெஞ்சில் இருந்த ஷேக் ரஷீத், 3வது சீசனில் தான் முதல் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
இதனால் இந்த சீசனில் இனி ஷேக் ரஷீத்-க்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஷேக் ரஷீத் குறித்து சிஎஸ்கே அணியின் பவுலிங் ஆலோசகரான எரிக் சிம்மன்ஸ் பேசுகையில், லக்னோ அணிக்கு எதிரான போட்டியை போல் இதற்கு முன்பாக ஷேக் ரஷீத்தை களமிறக்க சரியான இடம் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: தோனியை புகழ்ந்து தள்ளிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்.. பட்டியலிட்ட காரணங்கள்!!

லக்னோ அணிக்கு எதிராக மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு சிஎஸ்கே அணியின் கேப் அளிக்கப்பட்ட போது, அவருக்கு கிடைத்த கைத்தட்டல்களே அவரின் ஆட்டம் எப்படி என்று புரிந்திருக்கும். 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே சிஎஸ்கே அணிக்கு அவர் வந்துவிட்டார். ஆனால் ஒருநாள் கூட வலைப்பயிற்சியை தவறவிட்டதே கிடையாது. எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுவார். வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக அவர் பயிற்சியை கைவிடவே இல்லை. அவர் ஓய்வறையில் மிகவும் பாசிட்டிவான வீரராக வலம் வந்தார்.

கடந்த ஆண்டே அவர் ஐபிஎல் தொடரில் விளையாட தயாராகிவிட்டார் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். அவரின் ஆட்டம் ருதுராஜ் கெய்க்வாட் போல் இருப்பதாக பலரும் கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. சிஎஸ்கே அணியில் என்னுடைய பணி பவுலிங்கில் தான் உள்ளது. ஆனால் பேட்ஸ்மேன்கள் பலரும் ஷேக் ரஷீத் குறித்து சிறந்த விஷயங்களை மட்டுமே பகிர்ந்துள்ளனர். இன்றைய ஆட்டம் அவரின் வெறும் தொடக்கம்தான். அவர் மிகப்பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: சேப்பாக்கம் பிட்ச் சரியில்லை... சர்ச்சையான தோனியின் பேட்டி!!