இந்திய அணியில் சீனியர் வீரர்கள் ரஞ்சிக் கோப்பைத் தொடரில் விளையாட வேண்டும் என்ற பிசிசிஐ உத்தரவால், விராட் கோலி மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப்பின் டெல்லி அணிக்காக ரஞ்சிக் கோப்பைத் தொடரில் விராட் கோலி விளையாட உள்ளார். விராட் கோலியின் பேட்டிங் நுட்பத்தில் பல்வேறு கோளாறுகள் இருப்பதால், அதைச் சரிசெய்ய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரிடம் உதவி கோரியுள்ளார் விராட் கோலி.
உலகக் கிரிக்கெட்டில் 2014 முதல் 2019ம் ஆண்டுவரை கோலி உச்சத்தில் இருந்தபோது அவருக்கு பிரத்தியேகமாக பேட்டிங் பயிற்சி அளித்து தவறுகளைத் திருத்தியதில் சஞ்சய் பங்கருக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் தடுமாறிய விராட் கோலி, உள்நாட்டுப் போட்டியிலும் சொதப்பிவிடக்கூடாது என்பதற்காக தனது பேட்டிங்கில் உள்ள தவறுகளைத் திருத்த சஞ்சய் பங்கர் உதவியை கோலி நாடியுள்ளதாகதகவல்கள் தெரிவிக்கின்றன.
விராட் கோலி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஒரு சதம் மட்டுமே முதல் டெஸ்டில் அடித்தார், அதன்பின் 4 டெஸ்ட்களிலும் சேர்த்து 91 ரன்கள் மட்டுமே சேர்த்து மோசமான ஃபார்மில் இருந்தார். ஆஃப் சைடு விலகிச் செல்லும் பந்தில் கோலி பலவீனமாக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் விராட் கோலியை வெச்சு செய்தனர். இதையடுத்து, வரும் 30ம் தேதி டெல்லி அணி இறுதி லீக் ஆட்டத்தில் சர்வீசசஸ் அணியுடன் மோதுகிறது. டெல்லி கோட்லா மைதானத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில் விராட் கோலி டெல்லி அணியில் களமிறங்குகிறார். அதற்குள் தனது பேட்டிங்கில் இருக்கும் தவறுகளைத் திருத்த சஞ்சய் பங்கரை கோலி அழைத்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மும்பை அணிக்காக 12 ஆண்டுகளுக்கு பின் களமிறங்கி, ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக மோசமாக பேட் செய்தார். இதில் சுப்மான் கில் பஞ்சாப் அணிக்காக களமிறங்கி, 2வது இன்னிங்ஸில் சதம் அடித்துள்ளார். பரோடா அணிக்காக களமிறங்கிய ஜடேஜா 12 விக்கெட்டுகளை வீழ்த்தி, 38 ரன்கள் சேர்த்து தனது ஃபார்மை நிரூபித்துள்ளார். ஆனால், ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் நிலைமை பரிதாபம்தான்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபியில் இவர்களை அணியில் விளையாட வையுங்கள்..? ரவிச்சந்திரன் அஸ்வின் தரமான, சிறப்பான ஐடியா!
2014 முதல் 2019ம் ஆண்டுவரை கோலி கிரிக்கெட்டில் உச்சத்தில் இருந்தார். இந்த காலக்கட்டத்தில்தான் கோலி 80 சர்வதேச சதங்களை விளாசினார். அப்போது இந்திய அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் இருந்தார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் கோலி 2 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார்.

விராட் கோலிக்கு பேக்ஃபுட்டில் சென்று விளையாடுவது சிக்கலாக இருக்கிறது, அதேபோல ஆஃப் சைடில் விலகிச் செல்லும் பந்தை ஆடுவதிலும் பிரச்சினை இருக்கிறது. இதற்கான முறையான பயிற்சியை கோலிக்கு சஞ்சய் பங்கர் அளிக்க உள்ளார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் லென்த்தில் பிட்ச் ஆகி பவுன்ஸ் ஆகும் பந்தையும் கோலியால் விளையாட முடியவில்லை, பந்து திடீரென உயரே எழும்பும் பந்தை பேக்ஃபுட்டில் எவ்வாறு சென்று விளையாடுவது குறித்து கோலிக்கு முக்கியமாகப் பயிற்சிஅளிக்கப்பட உள்ளது
விராட் கோலி பாரம்பரிய பிரண்ட் ஃபுட் பேட்டர், கவர் டிரைவ், ஓவர் டிரைவ் ஷாட்கலை அற்புதமாக ஆடக்கூடியவர். ஆனால், தேவைக்கு ஏற்ப விக்கெட்டை காப்பாற்ற கால்களை நகர்த்தி ஆடும் பேக்ஃபுட் நுட்பத்தை அவரால் சரியாக கையாள முடியவில்லை. கடந்த பல ஆண்டுகளாக கோலி சிறப்பாக ஆடிய ஆட்டங்களில் அவர் ரன் சேர்த்த “வேகன்வீல்” குறித்து ஆய்வு செய்தால், பெரும்பாலும் ஸ்குயர் கட், ஸ்குயர் டிரைவ், கவர் டிரைவ் மூலமே ரன்களை குவித்திருப்பார். புதுவிதமாக ஷாட்களை கையாண்டு கோலி கடந்த சில ஆண்டுகளாக ரன்களை அடிக்கவில்லை.
இதையும் படிங்க: 'நோ… நோ… உலக சூப்பர் ஸ்டார்களான நாங்கள் உள்ளூர் கிரிக்கெட்டிலா…?' பிசிசிஐ-க்கு எதிராக கெத்துக்காட்டும் கோலி-கே.எல்.ராகுல்..!