டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் மெஜாரிட்டி பெற 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இ ந் நிலையில் எக்ஸிட் போலில் பாஜக 40 முதல் 50 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸிட் போல் நிறுவனங்களான
சாணக்கியா ஸ்ட்ராட்டஜிஸ், ஜேவிசி, போல் டைரி, பி-மார்க், பிப்பிள்ஸ் இன்சைட் மற்றும் பிப்பிள்ஸ் ப்ளஸ் ஆகிய 6 நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகளும் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. போல் டைரி மற்றும் பிப்பிள்ஸ் இன்சைட் ஆகியவை பாஜகவுக்கு 40 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளன. ஜேவிசி, சாணக்கியா ஸ்ட்ராட்டஜிஸ் மற்றும் பி-மார்க் ஆகியவை பாஜக 39 இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளன. ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி 31 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பிருப்பதாகக் கணித்துள்ளன.

பெரும்பாலான கணிப்புகள் பாஜகவுக்குச் சாதகமாக அமைந்துள்ள நிலையில், வீ பிரிசைட் நிறுவனம் மட்டும் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. அதன் கருத்துக் கணிப்புகளின்படி, ஆம் ஆத்மி கட்சி, 46 முதல் 52 இடங்கள் வரை பெற்று மூன்றவது முறையாக ஆட்சியை தக்கவைக்கும் என்று கணித்துள்ளது.
டெல்லியில் தொடர்ச்சியாக 3 முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கடந்த 2015, 2020ஐ போலவே ஓரிடத்தையும் பிடிக்காது என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சாணக்கியா மட்டும் 3 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. கணிப்பு முடிவுகள் போல தேர்தல் முடிவுகள் அமைந்தால் காங்கிரஸ் கட்சிக்கு இது மிகப் பெரும் பின்னடைவாக இருக்கும். 1993இல் முதல் முறையாக பாஜக வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பின்னர் அக்கட்சி டெல்லியில் வெல்லவில்லை. 1998, 2003, 2008 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கடந்த 2015இல் 67 இடங்களையும், 2020இல் 62 இடங்களில் ஆம் ஆத்மி வென்றது .
இதையும் படிங்க: ஆம் ஆத்மி தொண்டர்கள் மீது பாஜகவினர், போலீசார் தாக்குதல்: நடவடிக்கை கோரி, தேர்தல் ஆணையத்துக்கு கெஜ்ரிவால் கடிதம்