சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் ஜி ப்ளாகில் வசித்து வருபவர் பாலு வயது 50). இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவருக்கு வள்ளி (வயது 42) என்ற மனைவியும் கார்த்திக் (வயது 29) என்ற மகனும், அஞ்சலை (வயது 25) என்ற மருமகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக அதே முகவரியில் வசித்து வருகின்றனர். குடி போதைக்கு அடிமையான பாலு அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் கார்த்திக் மற்றும் அவரது தந்தை பாலு ஆகியோருக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது திடீரென கார்த்திக் அக்கம் பக்கத்தினரை அழைத்து தனது தந்தை போதையில் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டார் எனக் கூறி உள்ளார்.

உடனே வீட்டிற்குள் ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த பாலுவை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பேசின் பிரிட்ஜ் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்த பேசின் பிரிட்ஜ் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாலு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இதனை அடுத்து பேசின் பிரிட்ஜ் போலீசார் கார்த்திக்கை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது கார்த்தி போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். மேலும் உயிரிழந்த பாலுவின் முதுகில் கத்தி குத்து இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: ஹவுஸ் ஓனருக்கு விபூதி அடித்த கும்பல்.. பாத்ரூம் கழுவும் சாக்கில் நகைகள் அபேஸ்.. திரிபுரா திருடர்களை தூக்கிய போலீஸ்..

போலீசாரின் விசாரணையில் தனது தாயார் வள்ளி மற்றும் மனைவி அஞ்சலை ஆகிய இருவரை பற்றி பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆண்களோடு தொடர்பு படுத்தி மிக கேவலமாக பேசியதால் இன்று காலை தந்தை பாலுவை தான் கண்டித்ததாகவும், அவர் கேட்காமல் வாக்குவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் ஹெல்மெட்டால் தலையில் அடித்ததாகவும் கார்த்தி கூறி உள்ளார்.
மேலும் பாலு மயக்கமான போது வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து, அவரது முதுகில் குத்தியதாகவும் பிறகு இடது வயிற்றில் இரண்டு முறை குத்தி விட்டு மது போதையில் தன்னைத்தானே குத்திக் கொண்டார் என அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்ததாக கார்த்தி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனை அடுத்து பேசின் பிரிட்ஜ் போலீசார் கார்த்திக் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மது போதையில் தாய் மற்றும் மனைவி குறித்து அவதூறாக பேசிய தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன், நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மாயமான 922 கிலோ வெள்ளி கட்டிகள்.. கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கைது.. ஹை அலர்ட்டில் அதானி துறைமுகம்..!