உத்தரப் பிரதேசத்தில் நடந்த மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் உயிரிழந்தது குறித்தும், காயமடைந்தது குறித்தும் எந்த புள்ளி விவரங்களையும் மத்திய அரசு வைத்திருக்கவில்லை என மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் நடந்த மகா கும்பமேளாவில் நடந்த கூட்ட நெரிசலில் எத்தனை பேர் உயிரிழந்தனர், காயமடைந்தனர், அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன, காரணம் என்ன என்பது குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.சி.வேணுகோபால், கிர்சன் நம்தியோ கேள்வி எழுப்பினர்.

இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் பதில் அளித்து மக்களவையில் பேசியதாவது:
கும்பமேளாவில் நடந்த கூட்டநெரிசல் என்பது மாநில அரசு அதிகாரத்துக்கு உட்பட்டது, போலீஸார், பொது ஒழுங்கிற்கு உட்பட்டது, அரசியலமைப்புச் சட்டத்தில் 7-வது பட்டியலில் மாநில அரசுக்கு உட்பட்டது. மதரீதியான கூட்டங்கள் நடத்துவது, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, பக்தர்களுக்கு வசதிகளை செய்து கொடுப்பது, மக்கள் கூடுமிடங்கள், திருவிழாக்களில் பேரிடர் வராமல் தடுப்பது ஆகியவை மாநில அரசுகளின் பொது ஒழுங்கிற்கு உட்பட்டவை மாநில அரசுப்பட்டியலி்ல் வரும்.
இதையும் படிங்க: கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி... அரசுடன் கிரிமினல்கள் தொடர்பு.. விசாரணை நடத்த வலியுறுத்தல்..!

மாநிலத்தில் நடந்த எந்தவிதமான பேரிடர்களுக்கும் எந்த வகையான விசாரணை நடத்தவும் மாநில அரசுகளுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. குறிப்பாக கூட்டநெரிசல், உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி அளித்தல், காயமடைந்தவர்களுக்கு நிதயுதவி அளித்தல் ஆகியவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும். மாநில அரசுகள்தான் இதை சரி செய்து சூழலை எதிர்கொள்ளும். இந்த புள்ளிவிவரங்களை மத்திய அரசு பராமரிக்காது எங்களிடம் இல்லை.
கூட்டங்களை எப்படி கட்டுப்படுத்துவது, என்னென்ன முன்னெச்சரி்க்கை நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து தேசியபேரிடர் மேலாண்மை அமைப்பு முன்கூட்டியே விரிவான பாதுகாப்பு வழிமுறைகளை வகுத்துள்ளது.

கூட்டத்தினரை எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்து போலீஸ் ஆய்வு மற்றும் மேம்பாடும் வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகமும் இது தொடர்பாக நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கியுள்ளது, அது மட்டுமல்லாமல் மாநில அரசுகள் தங்களுக்கென தனியாக நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றலாம்” எனத் தெரிவித்தார்.

ஆனால் உ.பி. மாநில டிஐஜி வைபவ் கிருஷ்ணா கடந்த ஜனவரி 29ம் தேதி கூறுகையில் “பிரயாக்ராஜில் நடந்த கூட்டநெரிசலில் 30 பக்தர்கள் உயிரிழந்தனர், 60 பேர் காயமடைந்தனர்” என ஊடகங்களிடம் தெரிவித்தார். ஆனால், மத்திய அரசோ தங்களிடம் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் குறித்த எந்த புள்ளிவிவரங்களும் இல்லை என்று தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: மகா கும்பமேளாவில் தாக்குதல் நடத்த சதி.. வசமாக சிக்கிய தீவிரவாதி... குலைநடுங்க வைக்கும் சதித்திட்டம் அம்பலம்..!