காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் அறுவடை முடிந்தும், அறுவடைக்கு தயாராகியும் உள்ள நெற்பயிர்கள் நீரில் நனைந்து ஈரப்பதத்துடன் நிற்கின்றன.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் நெற்பயிர்கள் அதிகபட்சமாக இந்திய உணவுக் கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு இந்தியாவின் பிற மாநிலங்களில் விநியோகிக்கப்படும். மாநில அரசும் தன் பங்குக்கு கொள்முதல் செய்து கொள்ளும். நேரடி விற்பனையும் நடைபெறும். ஆனால் அதிக அளவு கொள்முதல் என்பது மத்திய அரசாலேயே செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: மத்திய முதியோர் நலத்துறை வருமா?: மனுதாரர் அரசிடம் முறையிட உச்ச நீதிமன்றம் அனுமதி..

பருவம் தப்பி பெய்த மழையால் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதல் ஈரத்துடன் நெற்பயிர்கள் காணப்படுகின்றன. அதாவது 17 சதவிதம் வரை ஈரப்பதம் உள்ள நெற்பயிர்களை கொள்முதல் செய்து கொள்வது வாடிக்கை. ஆனால், இம்முறை அதிக ஈரத்துடன் உள்ளதால், இந்த அளவை 22 சதவிதம் வரை உயர்த்தி கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த கோரிக்கையை தமிழக உணவுத்துறை செயலார் ராதாகிருஷ்ணன் மத்திய அரசிடம் கொண்டு சென்றார். இதனை ஏற்று மத்திய உணவு சேமிப்பு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த உதவி இயக்குநர்கள் நவீன், ப்ரீத்தி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல், அபிஷேக் பாண்டே ஆகியோர் தமிழகம் வர உள்ளனர்.

திருச்சிக்கு வரும் மத்தியக் குழுவினர் தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் இந்திய உணவுக் கழக அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் அவர்கள் நெற்பயிர்களின் ஈரத்தன்மை குறித்து சோதித்துப் பார்க்க உள்ளனர். ஆய்வின் முடிவில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 22 சதவித ஈரப்பத நெல் கொள்முதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் 17.50 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையை துறந்தனர்