சென்னையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கடந்த 08.10.2015 அன்று பஞ்சமி நிலத்தை மீட்க உயர்நிலைக் குழுவைத் தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழு பல ஆண்டுகளுக்குப் பிறகு 2.5 லட்சம் ஏக்கர்களை அடையாளம் கண்டிருப்பதாக செய்தி வெளியிட்டது. ஆனால், மொத்தம் இருப்பது 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம். இக்குழு அடையாளம் கண்டிருப்பது 2.5 லட்சம் ஏக்கர்தான். ஆனாலும், அந்த 2.5 லட்சம் ஏக்கர் கூட இன்று வரை மீட்கப்படவில்லை.

ஆகவே, பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியல் சமூக மக்களிடம் ஒப்படைப்பதில் திமுக, அதிமுக 2 அரசாங்கங்களும் அலட்சியமாகவும், மெத்தனப் போக்காகவும் நடந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் அரசாங்கத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் என்கிற பெயரில் பட்டியல் சமூக மக்களின் பல்லாயிரக்கணக்கான நிலங்கள் ஆட்சியாளர்களால் தொடர்ந்து பறிக்கப்படுகிறது. சென்னை பரந்தூர் விமான நிலையம் உட்படப் பல்லாயிரக்கணக்கான பட்டியல் சமூக மக்களின் நிலங்கள் வளர்ச்சித் திட்டம் பெயரில் பறிக்கக்கூடிய நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு இருக்கிறது.

நில உச்சவரம்பு சட்டம் ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தில் அமலில் உள்ளது. இந்த 60 ஆண்டுகளில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்துள்ளன. வெறும் 2 லட்சம் ஏக்கர் மட்டும்தான் நில உச்சவரம்பு சட்டத்தைப் பயன்படுத்தி நில விநியோகம் நடைபெற்றது. ஆகவே நில விநியோகத்தைத் தமிழக ஆட்சியாளர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியும். இப்போது உள்ள தமிழக அரசாங்கமாவது உயர்நிலைக் குழு குறைந்தபட்சமாகக் கண்டறிந்த 2.5 லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்பதற்கு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பெ. சண்முகம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மசோதாக்களை 3 ஆண்டுகள் நிறுத்தி வைத்தது ஏன்..? தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி.. இன்றும் விசாரணை.!
இதையும் படிங்க: முதுகலை மருத்துவ படிப்பு இடஒதுக்கீடு... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு....