கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டு பாஜகவுக்கு எதிராக இந்தியா என்ற பெயரில் மாபெரும் கூட்டணி அமைத்திருந்தன. ஆனால் தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு கட்சிகளாக கூட்டணியில் இருந்து வெளியேறி வருகின்றன.
இந்த நிலையில் டெல்லியில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் இந்த கூட்டணிக்கு முடிவு கட்டும் விதத்தில் அமைந்துள்ளது. குறிப்பாக டெல்லியின் ஆளுங்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தியது இதற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
கூட்டணியில் இருந்து வெளியேறிய தலைவர்கள் அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ் ஆகியோரடெல்லி தேர்தலில் கெஜ்ரிவாலை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது. தற்போது தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் காஷ்மீர் முதலமைச்சருமான உமர் அப்துல்லாவும் இந்தியா கூட்டணியை விமர்சித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: "எனக்கு தோல்வி பயம் இல்லை : புது டெல்லியில் மட்டுமே போட்டி" ; பாஜகவுக்கு கெஜ்ரிவால் பதிலடி
"நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாமல் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர் காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் தனித்தனியே போட்டியிடுவதுடன் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொள்வதையும்" சாடி இருக்கிறார்.

"தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலம் பெறவில்லை என்றாலும் அவர்களை ஆட்சி அமைக்க விடாமல் தடுப்பதில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேரவில்லை. தேர்தலுக்குப் பிறகு இந்தக் கூட்டணியில் எதிர்காலம் குறித்து தெளிவற்ற நிலை நிலவி வருகிறது. கூட்டணியின் எந்த கூட்டமும் இதுவரை நடைபெறாது துரதிஷ்டவசமானது. யார் வழி நடத்துவது? கூட்டணியின் நிகழ்ச்சி நிரல் என்ன? என்பது பற்றி எந்த விவாதமும் நடைபெறவில்லை" என்றும் உமர் அப்துல்லா புலம்பி தள்ளி விட்டார்.
இறுதியாக "இந்தியா கூட்டணி" கலைக்கப்பட வேண்டும் என்று சொல்லி முடிவுரையும் எழுதி விட்டார், அவர். அதே நேரத்தில் " டெல்லி தேர்தலுக்கு பிறகாவது கூட்டணியின் எதிர்காலத்தை தெளிவுபடுத்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி பேச வேண்டும்" என்றும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
"நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டுமே இந்த கூட்டணி என்றால் அதை முடித்துக் கொள்ளலாம். ஆனால் வருகிற சட்டசபை தேர்தல் களிலும் தொடர வேண்டும் என்றால் நாம் இணைந்து செயல்பட வேண்டும்" என்றும் உமர் அப்துல்லா வலியுறுத்தி இருக்கிறார்.

ஆர் ஜே டி தலைவர் தேஜஸ்வி யாதவ் "இந்தியா கூட்டணி, அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டதாக"வும், "மக்களவைத் தேர்தலுக்காகவே இந்த அணி உருவாக்கப்பட்டது" என்றும் கூறியதற்கு மறுநாள் இந்த கருத்து வெளியாகி இருக்கிறது. "நாடாளுமன்ற தேர்தலுக்காகவும் பாஜகவின் வெற்றி பயணத்தை தடுத்து நிறுத்தவும் தான் இந்த அணி உருவாக்கப்பட்டது. எனவே இப்போது அதற்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் எதிர்பாராதது" என்றும் தேஜஸ்வி கூறியிருந்தார்.
உமர் அப்துல்லாவின் கருத்துக்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், " இந்திய கூட்டணி கட்சிகளின் கருத்து காங்கிரஸ் கட்சியை கட்டுப்படுத்தாது" என்றார். "டெல்லி தேர்தலில் காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்திய கூட்டணி கட்சிகள் முடிவு செய்ய வேண்டியது இல்லை" என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கிடையில்டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் கடுமையான எதிர்ப்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தேர்தலில் பாஜகவுக்கும் தங்களுக்கும் தான் நேரடி போட்டி என்று கெஜ்ரிவால் கூறியதும் இங்கு கவனிக்கத்தக்கது.

டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் மறைமுகமாக உதவி செய்வதாகவ டெல்லி முதல்வர் அதிஷியும் குற்றம் சாட்டி இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் இந்த இரு கட்சிகளும் கூட்டணியில் போட்டியிட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த அளவுக்கு மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘இந்தியா கூட்டணி’ மக்களவைத் தேர்தலோடு முடிந்துவிட்டது: தேஜஸ்வி யாதவ் வெளிப்படை