ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோபிசெட்டிபாளையம் முடச்சூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கோபி சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன், பவானி சட்டமன்ற உறுப்பினர் பன்னாரி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் ஈரோடு மேற்கு மாவட்டத்தை சேர்ந்த அந்தியூர், பவானிசாகர், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் அதிக அளவில் பங்கேற்றிருந்தனர்.

இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பேச ஆரம்பித்த போது, அந்தியவரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் அதிமுக சார்பில் நடைபெறும் எந்த கூட்டங்களிலும் பங்கேற்க தனக்கு அழைப்பு விடுப்பதில்லை எனக்கூறி, மேடையில் ஏறி அவரிடமே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “நாங்க எல்லாம் கஷ்டப்பட்டு கட்சிக்கு வேலை செய்யுறோம். தொண்டர்களோடு இருந்தே பேசுறேன். தொண்டர்கள் தொண்டர்கள்ன்னு பேசுறீங்க... நான் சொல்லுறத ஒரு நிமிஷம் கேளுங்க” ஆவேசமாக பேசினார்.
இதையும் படிங்க: பாஜகவா..? ஒன்றிணைப்பா..? செங்கோட்டையனுடன் சேர்ந்து எடப்பாடியாரை சந்தித்த தங்கமணி..!

செங்கோட்டையனிடம் தகராறு செய்த நபரை அங்கிருந்த பிற அதிமுக நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட நிர்வாகிக்கும், அங்கிருந்த அதிமுகவினருக்கும் இடையே கடும் கைகலப்பு ஏற்பட்டது. செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அந்த நபரைச் சூழ்ந்து கொண்டு அடிக்க முயன்றதால் அந்த இடமே பரபரப்பானது. உடனடியாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலையிட்டதை அடுத்து கைகலப்பை தவிர்த்த நிர்வாகிகள், அந்த நபரை மண்டபத்தை விட்டு வெளியேற்றினர்.

கடந்த மாதம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய கே.ஏ.செங்கோட்டையன் அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக தோல்வியடைந்தற்கு சில துரோகிகளே காரணம் என குற்றச்சாட்டி இருந்தார். இந்த கருத்து அதிமுகவில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சில அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு பதிலடி கொடுத்திருந்தனர். இந்நிலையில் செங்கோட்டையனை நோக்கி மேடையேறிய அதிமுக நிர்வாகியும் இதே கேள்வியை அவரிடம் கேட்க முயன்றதாகவும், அதனை அவரது ஆதரவாளர்கள் தடுத்ததால் தான் கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சோதனை மேல் சோதனை... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த இரண்டு மாஜிக்கள்... காரணம் என்ன?