கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் தொண்டமாடிஹள்ளி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் நரசிம்மமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இங்கு மேற்கு வங்காளத்தை சேர்ந்த சஷாந்த் என்பவர் தனது மனைவி லிவிகா மற்றும் 4 வயது மகன் அபிஷேக்குடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை சுஷாந்தின் மகன் அபிஷேக்கும், அவரது மைத்துனரின் 15 வயது மகனும் தோட்டத்தில் திருடன், போலீஸ் விளையாட்டு விளையாடி உள்ளனர். அப்போது கோழிப்பண்ணையில் இருந்த துப்பாக்கியை எடுத்த மைத்துனர் மகன், அது பொம்மை துப்பாக்கி என நினைத்து சிறுவன் அபிஷேக்கை பார்த்து சுட்டு உள்ளான். அதிலிருந்து தோட்டா பாய்ந்து அபிஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அபிஷேக்கின் தாயார் லிவிகாவையும் மற்றொரு குண்டு துளைத்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: மாஜி எம்எல்ஏவை அடித்துக் கொன்ற ஆட்டோ டிரைவர்: கர்நாடகாவில் பரபரப்பு

மேலும் காவல் கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுன பாலதண்டி மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். இதனைத்தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நாகமங்களா போலீசார், 15 வயது சிறுவனையும், துப்பாக்கி உரிமையாளரான நரசிம்மமூர்த்தி மீதும் வழக்குபதிந்துள்ளனர். துப்பாக்கியை நரசிம்மமூர்த்தி எதற்காக வைத்திருந்தார். அதற்கு உரிய அனுமதி பெற்றுள்ளாரா? அல்லது கள்ளத்துப்பாக்கியா? என்கிற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்தோடு துப்பாக்கியை கோழிப்பண்ணையில் மறைத்து வைத்திருந்ததிற்கு காரணம் என்ன என்றும் விசாரித்து வருகின்றனர். சமீபகாலமாக பல்வேறு வன்முறை சார்ந்த வீடியோ கேம்களில் சிறுவர்கள் அடிமையாகி வருவதால் துப்பாக்கியை கையாள எளிதில் கற்றுக்கொள்வதாகவும், இதுபோன்று குழந்தைகள் வன்முறை விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் குழந்தைகளை பெற்றோர் பொறுப்புடன் பேணிக்காக்க வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: சிறுவனின் அடிப்பட்ட கன்னம்.. தையலுக்கு பதில் பெவிகால்..! இது கர்நாடக கொடூரம்