அமெரிக்காவின் மின்னசோட்டாவின் மினியாபோலிஸ் நகரிலிருந்து கடந்த திங்கள்கிழமை டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் கனடாவின் டொரண்டோவிற்கு புறப்பட்டது. இந்த சிஆர்ஜே-900 என்ற விமானத்தில் 4 பணியாளர்கள் மற்றும் 76 பயணிகள் என 80 பேர் பயணித்தனர். இந்த விமானம் டொரண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கும் போது 51 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பனிப்புயல் வீசியதாக கூறப்படுகிறது. அதேசமயம் கனடாவில் கடும் பனிப்பொழிவு நிலவியாதல் ஓடுபாதையில் தரையிறக்குவதும் மிகுந்த சிரமமாக இருந்துள்ளது.

எனினும் பைலட் மற்றும் கோ பைலட் இணைந்து விமானத்தை லாவகமாக தரையிறக்க முயற்சித்துள்ளனர். அப்போது விமான ஓடுபாதையில் நீண்ட தூரம் சறுக்கியபடியே சென்ற விமானம், திடீரென தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விமான ஓடுபாதையில் தீப்பொறி பறந்து, கடும் கரும்புகை உண்டானது. அதிர்ஷ்டவசமாக விமானம் வெடித்து சிதறவில்லை. உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. ஆனால் விமானத்தில் பயணித்த 20 பயணிகள் பலத்த காயமடைந்தனர். 3 பேரின் நிலை கவலைக்கிடமாக மாறியது. விமானம் தலைக்குப்புற கவிழ்ந்ததால் அதில் பயணித்த, பயணிகள் விமானத்திற்குள் தலைகீழாக தொங்கினர். விமான பணியாளர்கள் தவழ்ந்தபடியே வந்து விமானத்தின் கதவை திறந்து பயணிகள் வெளியேற உதவி செய்தனர்.
இதையும் படிங்க: ஐந்து கண் நாடுகள்…. இந்திய - கனடா சிக்கல்! அரசியலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் பதிவு

விபத்து நடந்த சில நிமிடங்களில் அவசரகால மீட்பு படையினர் பயணிகளை மீட்டனர். காயமுற்றவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பயணிகளிடையே தலையில் காயங்கள், முதுகு சுளுக்கு, பதட்டம் மற்றும் தலைவலி உள்ளிட்ட பல்வேறு காயங்களை அவசர சிகிச்சைப் பணியாளர்கள் கையாண்டதாக மருத்துவ பணியாளர்கள் தெரிவித்தனர். விமான விபத்து காரணமாக விமான நிலையத்தில் மற்ற விமான சேவைகள் கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் வரை பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பான விசாரணை முடியும் வரை விமானநிலையத்தில் உள்ள இரண்டு ஓடுபாதைகள் மூடியே இருக்கும் என்றும் அறிவிக்கபப்ட்டுள்ளது.

இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவருக்கும் $30,000 அமெரிக்க டாலர்கள் நிவாரண தொகையாக வழங்குவதாக டெல்டா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ஏறத்தாழ 26 லட்ச ரூபாய் ஆகும். விமான விபத்திற்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி ஓடுபாதையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: விமான சேவை நிறுத்தம்.. 2 வழித்தடங்களுக்கு தடை.. ஏர் இந்தியா அதிர்ச்சி அறிவிப்பு