டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW), போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பிரபல பயிற்சி நிறுவனமான FIITJEE மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால் இந்தியாவின் பிரபல பயிற்சி நிறுவனமான FIITJEE க்கு பலத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிழக்கு டெல்லியில் உள்ள ப்ரீத் விஹார் மையத்தில் பயின்ற மாணவர்களின் பெற்றோரிடமிருந்து 190 புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
FIITJEE, ஜனவரி 2025-ல் ப்ரீத் விஹார் மையத்தை திடீரென மூடியது. காவல்துறை, FIITJEE-யின் இயக்குநர் மற்றும் பிறருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 406 (நம்பிக்கை மோசடி), 420 (ஏமாற்றுதல்) மற்றும் 120B (குற்ற சதி) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரியில் EOW-க்கு 35 புகார்கள் வந்தன, இது இப்போது 190 ஆக உயர்ந்துள்ளது. 2022 முதல் புகார்கள் வந்து கொண்டிருப்பதால், IPC-யின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யூடியூப் பார்த்து கத்துக்கிட்டேன்..! தங்கக் கடத்தலில் கைதான நடிகை வாக்குமூலம்..!
இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா (BNS), ஜூலை 1, 2024 முதல் நடைமுறைக்கு வந்து இந்திய தண்டனவியல் சட்டம் IPC-யை மாற்றியுள்ளது. அதனால் இந்த புகார்கள் முதலில் கிழக்கு டெல்லி காவல்துறையிடம் பதிவு செய்யப்பட்டன. ஆனால், பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மற்றும் விரிவான விசாரணை தேவை என்ற காரணத்தால் இந்த வழக்கு EOW-க்கு மாற்றப்பட்டன.
காவல்துறையின் அறிக்கையின்படி, ஒரு DCP அளவிலான அதிகாரியின் தலைமையில் வழக்கு விசாரிக்கப்படுகிறது. விரைவில், நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தொடர்புடையவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படலாம். FIITJEE மீது காசியாபாத், நொய்டா (உத்தர பிரதேசம்) மற்றும் போபால் (மத்திய பிரதேசம்) ஆகிய இடங்களிலும் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த பிப்ரவரி மாதத்தில் கிரேட்டர் நொய்டா காவல்துறை, FIITJEE நிறுவனர் தினேஷ் கோயலுடன் தொடர்புடைய 12 வங்கி கணக்குகளிலிருந்து ரூ.11.11 கோடியை பறிமுதல் செய்தது. நாலெட்ஜ் பார்க் காவல்துறை மற்றும் சைபர் குற்றப்பிரிவு தலைமையிலான இந்த நடவடிக்கையில், கோயலிடம் 172 நடப்பு கணக்குகள் மற்றும் 12 சேமிப்பு கணக்குகள் இருப்பது தெரியவந்தது. இந்த கணக்குகளை காவல்துறை நிதி முறைகேடுகளுக்காக ஆராய்ந்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லி-என்.சி.ஆர் மற்றும் வட இந்தியாவில் உள்ள FIITJEE-யின் பல கிளைகள் மூடப்பட்டன. திடீரென நிறுவனங்கள் மூடப்பட்டதால் பணத்தைக் கட்டிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது, FIITJEE வெளியிட்ட அறிக்கையில் இது எதிரிகளால் நடத்தப்படும் ஒரு திட்டமிட்ட சதி என்று கூறியது. சில இடங்களில் நிறுவனத்தை மூடியதற்கு ‘தவிர்க்க முடியாத சூழ்நிலை’ (force majeure) காரணம் என்று கூறிய FIITJEE, செயல்பாடுகளை மீண்டும் தொடங்க முயற்சிகள் நடப்பதாக தெரிவித்தது.
பேச்சு நிறுவனத்தின் தற்போதைய குழப்பம் தற்காலிகமானது தான், மிக விரைவில் அனைத்து இடங்களிலும் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க நிறுவன அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர் என்று FIITJEE கூறியது.

முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென மையங்கள் மூடப்பட்டதால், நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் கட்டணத்தை திரும்ப கோரி வருகின்றனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நொய்டா, காசியாபாத், மீரட் மற்றும் போபால் போன்ற நகரங்களில் பெற்றோர்கள் பல காவல் புகார்களை பதிவு செய்துள்ளனர். திடீரென பயிற்சி நிறுவனங்கள் மூடியதன் காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் செய்வது அறியாது திகைத்து வருகின்றனர். பெற்றோரிடமிருந்து சட்டப்பூர்வ புகார்கள் வந்துள்ளன. பலர் முன்கூட்டியே பெரிய தொகையை செலுத்தி இருப்பதால் அதனை உடனடியாக திருப்பித் தருமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
FIITJEE-க்கு 41 நகரங்களில் 72 மையங்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்... பாஜக ஆளும் டெல்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!