2011 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட நிலையில் மீண்டும் 2016 ஆம் ஆண்டு மீண்டும் திமுக கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் அதற்கு பிறகு தொடர்ச்சியாக 9 ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணியில் உள்ளது. 2016 ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணியாக பிரிந்து இருந்த இடதுசாரிகள், விசிக, மதிமுக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளில் தேமுதிக, தமாக தவிர மீண்டும் திமுக அணிக்கு திரும்ப வந்தன. அதன் பின்னர் 2019, 2021 சட்டமன்ற தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட தொடர்ந்து பல தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் உள்ளது.

திமுக கூட்டணி கருணாநிதி காலத்தில் இருந்தது போல் தற்போது இல்லை. கருணாநிதி காலத்தில் திமுக கூட்டணியில் கூட்டணி நிகழ்ச்சிகளுக்கு அதிக அளவு இடங்கள் கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் 60 தொகுதிகள் வரை போட்டியிட்டது. இடதுசாரிகள் பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் விசிக, மதிமுக 10 தொகுதிகள் வரையிலும் நின்ற வரலாறு உண்டு. ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக, கூட்டணி கட்சிகளை குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் கொண்டுவந்து நிறுத்தியது.
இதையும் படிங்க: ’சிலர் கட்சியை மீறி தனது லாபத்துக்காக செயல்படுகிறார்கள்’.. அண்ணாமலையை வைத்துக்கொண்டே கலாய்த்த குருமூர்த்தி
இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது திமுக கூட்டணியை மறுத்து இந்த கட்சிகள் வெளியே செல்ல வேண்டும் என்றால் மீண்டும் மக்கள் நல கூட்டணி அமைக்க வேண்டும் அல்லது தனித்து போட்டியிட வேண்டும் என்கிற நிலை தான். அதிமுக பாஜக NDA அணி எதிர்ப்புறம் வலுவாக இருந்த காரணத்தினால் வேறு வழியில்லாமல் திமுக கொடுத்த சட்டமன்ற தொகுதிகளை ஏற்றுக்கொண்டு கூட்டணி கட்சிகள் திமுக கூட்டணியில் போட்டியிட்டன.

இதே பார்முலாவை 2024 மக்களவைத் தேர்தலிலும் திமுக கடைபிடித்தது. கூடுதலாக ஒரு தொகுதி கூட கொடுக்காமல் 2019-ல் கொடுத்த அதே அளவு எண்ணிக்கை தொகுதிகளையே கூட்டணி கட்சியில் கொடுத்தது. குறிப்பாக காங்கிரஸ் 16 முதல் 21 தொகுதிகள் வரை எதிர்பார்த்த நிலையில் 5 தொகுதிகளில் இருந்து எண்ணிக்கை ஆரம்பித்து 9 தொகுதியில் மீண்டும் பழைய எண்ணிக்கையிலே கொண்டு வந்து நிறுத்தியது திமுகவின் வெற்றி என்று சொல்லலாம். திமுகவின் இத்தகைய பெரியண்ணன் மனோ பாவத்தால் தோழமைக் கட்சிகள் கடும் மன வருத்தத்தில் இருந்தன.
கடந்த நான்கு ஆண்டு காலமாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மக்கள் சார்ந்த பிரச்சினைகளில் திமுகவுக்கு எதிராக வாயைத் திறக்க முடியாமல், ஆதரிக்கவும் முடியாமல் சிலுவை சுமக்கும் நிலையில் தோழமைக்கட்சிகள் இருந்து வருகின்றன. குறிப்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை, தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்பட்டவைகளை நிறைவேற்றாதது, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால்விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விளைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் திமுகவை விமர்சிக்க முடியாத நிலைமையில் தோழமைக் கட்சிகள் இருந்து வந்தன.

இந்த நிலையில் தான் 2023-க்கு பிறகு அதிமுக பாஜக உறவு முறிந்தது இனி பாஜகவுடன் கூட்டணியே இல்லை, 2026 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி இல்லை என்கிற நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி உறுதியாக அறிவித்தார். ஆனாலும் 2024 தேர்தல் நேரத்தில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கு அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இருந்தும், அதிமுக மீண்டும் பாஜகவுடன் சென்று விடும் என்கிற பிரச்சாரத்தின் காரணமாக கூட்டணி வைக்க தயங்கி இந்தியா கூட்டணியிலேயே தங்கிவிட்டனர்.
இந்நிலையில் 2024 பிறகு திமுக ஆட்சியின் மீதான மக்களுடைய கோபம் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. எந்த ஒரு பிரச்சனையிலும் நேரடியாக முதல்வரும், துணை முதல்வரும் தலையிடுவதில்லை. அதிகாரிகள் வைத்தது தான் சட்டம் என்கிற நிலை உள்ளது. இதனால் பொதுமக்களின் கோபம் கடுமையாக அதிகரித்து வருகிறது. தொழிலாளர் விரோத பிரச்சனைகள் காரணமாக முந்தைய அதிமுக ஆட்சியை விட திமுக மோசமாக நடந்து வருகிறது என்று இடதுசாரிகள் கூடுதல் கடுப்பில் உள்ளனர். இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து கூட்டணி கட்சிகள் லேசாக திமுகவை விமர்சிக்க தொடங்கியுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பண்ருட்டி வேல்முருகன் உள்ளிட்டோர் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் கூட்டணி நீடிக்குமா என்கிற போக்கு எழுந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியிலும் திமுக அங்கம் வகிப்பதால் பொறுமை காத்து வந்தது. அதனால் தொடர்ச்சியாக பல்வேறு விவகாரங்களில் காங்கிரசை திமுக நடத்தும் விதம், குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் வசமிருந்து பறித்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இனி நாம் மாற்று கட்சியை தேட வேண்டும் என்கிற நிலைக்கு காங்கிரஸ் தலைமை வந்துவிட்டதாக தெரிகிறது.

காங்கிரஸ் முன் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது, இரண்டு தவெகவுடன் கூட்டணி அமைப்பது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் பெரிய கட்சி என்பதால் காங்கிரஸ் நகர்ந்தால் மற்ற கட்சிகளும் அப்படியே நகர்ந்துவிடும் வாய்ப்புள்ளது. விசிகவும், மதிமுகவும் வேறு முடிவு எடுத்தால் பாமக அந்த கூட்டணியில் இணைய வாய்ப்புண்டு. இதனால் காங்கிரஸ் திமுக கூட்டணியை தொடர வேண்டுமா? கூடுதல் தொகுதிகள் வாய்ப்பு இருக்கும்போது அதை பயன்படுத்தலாம் என்று நிலையில் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை திடீரென விஜய்யை கூட்டணிக்குள் அழைத்துள்ளார்.
செல்வப்பெருந்தகை போன்ற அரசியல் அனுபவம் மிக்க தலைவர்களுக்கு விஜய் கட்சி திமுகவை கடுமையாக எதிர்ப்பதும், அரசியல் எதிரி என விரல் நீட்டி பேசி, வாரிசு என உதயநிதியை நேரடியாக அட்டாக் செய்து பேசியும், கொள்ளையடிக்கும் கூட்டத்தை வீழ்த்துவோம் என சவால் விட்டு அதுதான் தன் முதல் கடமை என இயங்கி வருவதை நன்றாக அறிந்திருப்பார். இந்நிலையில் விஜய்யை கூட்டணிக்குள் அழைப்பதும், குறிப்பாக இந்தியா கூட்டணிக்குள் வாருங்கள் என அழைப்பதும் திமுகவுக்கு எச்சரிக்கை விடுக்கிறாரா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.

திமுக கூட்டணிக்குள் விஜய் வர முடியாது என்பதை ஸ்கூல் படிக்கும் பிள்ளைகளை கேட்டால் கூட சொல்லிவிடுவார்கள். அப்படியானால் விஜய்யை செல்வபெருந்தகை கூட்டணிக்குள் அழைக்கிறார் என்றால் திமுக இல்லாத அணியை அமைக்க காங்கிரஸ் முயல்கிறதா? என்கிற கேள்வி அவரது பேட்டியின் மூலம் எழுகிறது. செல்வப்பெருந்தகை தெரிந்தே விஜய்யை கூட்டணிக்கு அழைப்பதன் பின்னனி டெல்லி மேலிடம் விஜய்யுடன் பேசி செல்வபெருந்தகைக்கு சிக்னல் கொடுத்திருக்கலாம், அதனாலேயே அவர் பேசுகிறார் என்று காங்கிரஸுக்குள் பேச்சு அடிபடுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் கேட்டபோது ராகுல் ஆரம்பத்திலேயே விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டினார். தமிழகத்தில் திமுக தவிர வேறு கூட்டணி இல்லை என்பதால் இழுத்த இழுப்புக்கெல்லாம் காங்கிரஸ் வளைந்து கொடுத்தது. இப்போது நிலைமை அப்படி அல்ல. அதிமுக, விஜய் என இரண்டு வாய்ப்புகள் உள்ளது. காங்கிரஸ் பழையபடி கூடுதல் தொகுதிகளுடன் களத்தில் நிற்கும் வாய்ப்பு உள்ளதால் அதை பயன்படுத்தவே பார்ப்பார்கள் என்று தெரிவிக்கின்றனர். அதேபோல் திமுக சமீப காலமாக டெல்லியில் மத்திய பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருவதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒருவேளை திமுக கூட்டணியில் நீடித்தால் லாபத்தை விட நஷ்டமே அதிகம், ஐந்தாண்டு திமுகவின் மக்கள் விரோத ஆட்சிக்கு நாம் தான் பொறுப்பேற்று கொள்ளவேண்டும், சரி அதற்கு ஏதாவது அணுகூலம் உண்டு என்றால் அதே 25 தொகுதிகள் என்றால் அதற்கு அதிமுக அல்லது விஜய்யுடன் சேர்ந்து வேறு முயற்சி எடுக்கலாம், கூட்டணி மொத்தமாக எதிர்புறம் சென்றால் திமுக வெல்ல முடியாது என்பது அனைவருக்கும் தெரியும், இதை உணர்ந்த டெல்லி மேலிடம் விஜய்யுடன் கூட்டணிக்கான வாய்ப்பை பேசலாம் என கிரீன் சிக்னல் காட்டியிருக்கலாம், அதனால் தான் செல்வபெருந்தகை தைரியமாக விஜய்யை அழைக்கிறார் என்கின்றனர்.
மறுபுறம் செல்வபெருந்தகையின் சமீபத்திய செயல்பாடுகளை திமுக தலைமை ரசிக்கவில்லையாம், ஆட்சியை விமர்சிப்பது, எதிர்க்கருத்துகளை சொல்வது, தற்போது கூட்டணிக்குள் விஜய்யை அழைத்தது எல்லாம் செல்வப்பெருந்தகை கூட்டணியை உடைக்கும் முயற்சியில் உள்ளதை காட்டுகிறது, திமுக அரசை, கட்சியை விமர்சிக்கும் விஜய்யுடன் கூட்டு என்றால் திமுக அங்கு எப்படி இருக்கும், இது அவருக்கு தெரியாதா? தெரிந்தே பேசுகிறார், அப்படியானால் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது காங்கிரஸ் என்றுத்தானே அர்த்தம் என்கின்றனர் திமுக பிரமுகர்கள்.

திமுக பாஜகவை நெருங்கி வருவதையும் காங்கிரஸ் டெல்லி மேலிடம் கவனித்து வருகிறது. இதனால் திமுக கூட்டணியில் இருந்து விலக முடிவுக்கு டெல்லி தலைமை வந்து விட்டதாக தெரிகிறது. தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாக ஒரு கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் அதிமுகவுடன் இணைய வேண்டும் அல்லது புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள தாவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற இரண்டு ஆப்ஷன்கள் தற்போது திமுக தோழமைக் கட்சிகளிடம் உள்ளது. அதனால் துணிச்சலாக திமுகவை எதிர்க்கும் மனநிலைக்கு வந்துள்ளனர். விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு கூட்டணிக்கு தாம் ஒத்து வருவதாகவும், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பகிர்வு தமக்கு உடன்பாடு என்றும் அறிவித்தார். இதனால் திமுகவுக்குள் சலசலப்பு தோன்றியது.

காங்கிரசும், விசிகவும் ஆட்சியிலும் பங்கு அதிகார பகிர்வு என்கிற கோரிக்கையை தொடர்ச்சியாக வைத்து வரும் நிலையில் விஜய்யின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் கூடுதல் இடங்களை பெற்று போட்டியிட்டு மாற்றாக உருவாகலாம் என ராகுல் நினைத்து அடுத்த மூவை எடுத்து வைக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்கிரஸ் தலைவரின் இந்த முயற்சி பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதில் அவர் மணியை கட்டி ஆரம்பித்து வைத்துள்ளார். கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் இனி ஆரம்பிக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: வேறு நாடாக இருந்தால் மோகன் பாகவத் சிறையில் இருந்திருப்பார்.. ராகுல் காந்தி ஆக்ரோஷம்!